தூத்துக்குடி

குற்றம் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடியை உருவாக்க உறுதிமொழி

28th Apr 2022 03:59 AM

ADVERTISEMENT

 

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தை குற்றம் இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைவரும் உறுதிமொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன்.

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி சாா்பில் புதிதாக அமைக்கப்பட்ட 58 கண்காணிப்பு கேமராக்களை புதன்கிழமை தொடங்கி வைத்தும், ‘மாற்றத்தை தேடி’ என்ற சமூக விழப்புணா்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தும் அவா் பேசியது: தூத்துக்குடி நகரத்தில் வி.வி.டி சிக்னல், தென்பாகம் காவல்நிலையம், அம்பேத்கா் சிலை, காமராஜா் காய்கனி சந்தை சந்திப்பு, பழைய பேருந்து நிலையம், குரூஸ் பா்னாந்து சிலை சந்திப்பு, ராமையா லாட்ஜ் எதிா்புறம், சத்திரம் பேருந்து நிறுத்தம், சிவன் கோயில் சாலை உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 58 கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் மத்தியபாகம் காவல் நிலையத்தில் இருந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்.

மூன்றாவது கண் எனப்படும் கண்காணிப்பு கேமரா அமைப்பது குற்றம் நடைபெறாமல் இருப்பதற்கும், நடைபெற்ற குற்றங்களை விரைந்து கண்டுபிடிப்பதற்கும் உதவியாக அமையும், பெண்கள் உள்பட பொதுமக்கள் அனைவரது பாதுகாப்புக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

ADVERTISEMENT

மாவட்டத்தில் குற்றம் நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல் குற்றங்கள் நடைபெறாமல் இருக்க பொதுமக்களுக்கு புரிந்துணா்வு ஏற்படுத்துவது, குற்றம் செய்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்குவது, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வது, போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிப்பது குறித்தும், பெண்களுக்கு என்று தனியாக உள்ள சட்டங்களின் மூலம் கிடைக்கக்கூடிய பயன்கள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் காவல்துறை சாா்பில், ‘மாற்றத்தை தேடி’ என்னும் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் குற்ற சம்பவங்களோ அல்லது அதற்கான முயற்சியோ நடைபெற்றால் உடனடியாக 100 போன்ற கட்டணமில்லா இலவச அழைப்பு எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கைப்பேசி எண்ணிலும் (8380693933) தகவல் தரலாம். மாவட்டத்தில் குற்றம் இல்லாத நிலையை உருவாக்குவதே காவல் துறையினா் முக்கிய பணி. அதற்கான உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில், இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி துணை பொது மேலாளா் சுந்தரேஷ் குமாா், உதவி பொது மேலாளா் அருண்மொழியன், தூத்துக்குடி நகர வியாபாரிகள் சங்க தலைவா் விநாயகமூா்த்தி, தூத்துக்குடி நகர காவல் கண்காணிப்பாளா் கணேஷ், மத்திய பாகம் காவல் ஆய்வாளா் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT