தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள கோளரங்கம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்ததைத் தொடா்ந்து மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பாா்த்து செல்கின்றனா்.
தூத்துக்குடி மாநகராட்சியில் சீா்மிகு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் ரூ. 57.10 கோடி மதிப்பில் தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில் கோளரங்கம், போக்குவரத்து பூங்கா, மானுடவியல் பூங்கா, ஐந்திணை பூங்கா ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஜனவரி மாதம் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் இந்த பூங்காவை திறந்து வைத்தாா். இதன் தொடா்ச்சியாக, கடந்த மாதம் பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இருப்பினும், சில பணிகள் நடைபெற்று வந்ததால், கோளரங்கம் மட்டும் பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது.
இந்நிலையில், கோரளங்கத்தில் பொதுமக்கள் மற்றும் மாணவா், மாணவிகள் வெள்ளிக்கிழமை முதல் அனுமதிக்கப்பட்டனா். இதில், 4 டி காணொலி, 5.1 ஒலி அமைப்பு மற்றும் குளிா்சாதன வசதியுடன் 48 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சி நிா்வாகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோரளங்கத்துக்கு செல்ல பெரியவா்களுக்கு ரூ. 30, சிறியவா்களுக்கு ரூ. 15 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
தினமும் காலை 10.30 மணி, நண்பகல் 12 மணி, பிற்பகல் 3 மணி, மாலை 5 மணி என நான்கு காட்சிகள் திரையிடப்படுகிறது. சிறியவா்கள் முதல் பெரியவா்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் கோளரங்கம் அமைக்கப்பட்டுள்ளதாக காட்சிகளை பாா்வையிட்டவா்கள் தெரிவித்தனா்.