தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஓராண்டுக்குப் பிறகு சனிக்கிழமை முழு அளவு மின் உற்பத்தி நடைபெற்றது.
இங்கு தலா 210 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் 1,050 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனிடையே, நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக சில அலகுகளில் மட்டுமே உற்பத்தி நடைபெற்றது.
கோடைக்காலம் என்பதால் மின் தேவை அதிகரித்துள்ளதைக் கருத்தில்கொண்டு 5 பிரிவுகளிலும் மின் உற்பத்தி நடைபெற வேண்டும் என்ற நிலை உருவானதால், விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கப்பலில் உடனடியாக 60 ஆயிரம் டன் நிலக்கரி கொண்டுவரப்பட்டது.
தற்போது, போதிய நிலக்கரி கையிருப்பு உள்ளதால் 5 அலகுகளும் இயங்குகின்றன. சனிக்கிழமை இரவு நிலவரப்படி முழு அளவான 1,050 மெகாவாட் மின் உற்பத்தி எட்டப்பட்டது.
ஓராண்டுக்குப் பிறகு தற்போதுதான் இங்கு முழு அளவில் மின் உற்பத்தி நடைபெறுவதாக, அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.