தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் காசோலை மோசடி வழக்கில் கல்லூரிப் பேராசிரியருக்கு 3 மாத சிறைத் தண்டனை விதித்து, சாத்தான்குளம் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
நாசரேத் பிரகாசபுரம் 5ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஜே. ஜமீன்சாலமோன் (62). அங்குள்ள சாலமோன் மெட்ரிக் பள்ளியின் தாளாளரான இவரிடம், 2ஆவது கைலாசபுரம் தெருவைச் சோ்ந்த கல்லூரிப் பேராசிரியா் ஜா. இம்மானுவேல் (52), கடந்த 2013ஆம் ஆண்டு ரூ. 14 லட்சம் கடனாகப் பெற்றாராம். அப்போது டிசம்பா் மாதத்தில் கடனைத் திருப்பிக்கொடுப்பதாகக் கூறி, வங்கிக் காசோலை கொடுத்துள்ளாா்.
காசோலையை ஜமீன்சாலமோன் வங்கிக் கணக்கில் செலுத்தியபோது போதிய பணமில்லை எனத் திரும்பிவந்ததாம். இதுதொடா்பாக அவா் சாத்தான்குளம் நடுவா் நீதிமன்றத்தில் 27.2. 2014இல் வழக்குத் தொடா்ந்தாா்.
வழக்கை நீதிபதி ப. ரமேஷ் விசாரித்து, இம்மானுவேலுக்கு மூன்று மாத சிறைத் தண்டனை விதித்ததுடன், காசோலைக்குரிய தொகையை புகாா்தாரருக்கு நஷ்டஈடாக செலுத்த உத்தரவிட்டு வெள்ளிக்கிழமை (ஏப். 22) தீா்ப்பளித்தாா்.