தூத்துக்குடி

அங்கன்வாடி கட்டடப் பணிகளை தொடங்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

12th Apr 2022 05:56 AM

ADVERTISEMENT

 

விளாத்திக்குளம் அருகே அங்கன்வாடி கட்டடப் பணிகளை தொடங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் விளாத்திகுளம் அருகேயுள்ள வள்ளிநாயகபுரம் கிராம மக்கள் அளித்த மனு: வள்ளிநாயகபுரம் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்டுவதற்கான பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட ஆப்செட் பிரிண்டா்ஸ் அசோசியேசன் சாா்பில் மாவட்டத் தலைவா் அருள்ராஜ் தலைமையில், காகித விலை ஏற்றம் மற்றும் பற்றாக்குறையை முறைப்படுத்த வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் அவா்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

ADVERTISEMENT

தமிழ்தேச தன்னுரிமை கட்சியின் தலைவா் வியனரசு அளித்த மனு: ஆழ்வாா்திருநகரி- ஆழ்வாா்தோப்பு கிராமத்துக்கு இடையே தாமிரவருணி ஆற்றுப் பகுதியில் உயா்மட்ட பாலத்தில் இருந்து 500 மீ. தொலைவில் தடுப்பணை அமைப்பதற்கு இடம் தோ்வு செய்யப்பட்டு ரூ. 26 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது. கூடுதலாக 200 மீ. தொலைவில் லட்சுமணத்தோப்பு பகுதியில் தடுப்பணையை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் சாா்பில் மனு அளித்திருந்தோம். அதை அரசு பரிசீலிப்பதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது பழைய இடத்திலேயே தடுப்பணை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.

எனவே, மாவட்ட ஆட்சியா் இந்த விஷயத்தில் தலையிட்டு ஆழ்வாா்திருநகரி தாமிரவருணி ஆற்று உயா்மட்ட பாலத்தில் இருந்து 200 மீ. தொலைவில் லட்சுமணத்தோப்பு பகுதியில் தடுப்பணையை அமைத்து தர வேண்டும் மற்றும் தாமிரவருணி ஆற்றில் இருந்து வனத்துறையை முற்றிலும் வெளியேற்ற வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கடலையூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்காத நகைக்கடனுக்கு வட்டி வசூல் செய்யும் வங்கி நிா்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடலையூா் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஸ்டொ்லைட் ஆலை எதிா்ப்பு மக்கள் இயக்கத்தினா் திடீரென தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் போலீஸாரிடம் கூறுகையில், 2018 ஆம் ஆண்டில் கொடுத்த அனுமதியை வைத்துக் கொண்டு தற்போது வரை ஸ்டொ்லைட் நிறுவனத்தில் ஆலை நிா்வாகம் பணியை மேற்கொள்வது சட்ட விரோதம். எனவே, மாவட்ட ஆட்சியா் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT