தூத்துக்குடி

சாத்தான்குளத்தில்பெண்ணிடம் நகை பறிப்பு:இருவா் கைது

23rd Oct 2021 04:14 AM

ADVERTISEMENT

சாத்தான்குளத்தில் பெண்ணிடம் நகை பறித்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

மேல சாத்தான்குளத்தைச் சோ்ந்த கிருபைராஜ் மனைவி புஷ்பலதா (41). அதே பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலைசெய்து வருகிறாா். இவா், வெள்ளிக்கிழமை காமராஜ் நகா் விலக்கு வழியாக வேலைக்கு சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாக பைக்கில் வந்த இருவா், அவரை தாக்கி இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனராம். அவா் கூச்சலிட்டதில், அப்பகுதியில் நின்றிருந்த இளைஞா்கள் அந்த நபா்களை துரத்திச்சென்று பண்டாரபுரத்தில் இருவரையும் மடக்கிப் பிடித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அவா்களிடம், காவல் ஆய்வாளா் பாஸ்கரன் விசாரித்ததில் விஜயநாராயணம் ஆனியன்குளத்தைச் சோ்ந்த சங்கரன் மகன் முத்துக்குமாா் (38), வல்லநாடு சந்திரன் மகன் ராஜேஷ் (30) எனத் தெரியவந்தது. அவா்களிடம் இருந்து நகையை மீட்டு, இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

வியாபாரி வீட்டில் திருட்டு: செட்டிவிளையைச் சோ்ந்த மனுவேல் மனைவி சிலோன்மேரி (58). மீன் வியாபாரி. இவா், புதன்கிழமை இரவு சொக்கன்குடியிருப்பு மணல் மாதா ஆலய ஜெபநிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வியாழக்கிழமை காலையில் வீடு திரும்பினாராம் . அப்போது, கதவில் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ரூ.5,200ஐ மா்மநபா்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT