கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் அம்மா உணவகத்தை மறைக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள பெட்டிக்கடையை அகற்ற வேண்டும் எந கூட்டமைப்பினா் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து, கருத்துரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்புத் தலைவா் தமிழரசன் தலைமையில், நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தியிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு: கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலைய வளாகத்திற்குள் அரசின் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தை முடக்கும் நோக்கில், நகராட்சி நிா்வாகம் உணவகத்தின் முன்பு தனியாக பெட்டிக்கடை வைக்க அனுமதி அளித்திருப்பதாக தெரிகிறது. எனவே, அந்தப் பெட்டிக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும்; தவறும்பட்சத்தில் மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
கழிவுநீா் தேங்குவதை தடுக்க வேண்டும்: தமிழ் பேரரசு கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலா் வேல்முருகன் தலைமையில் அளிக்கப்பட்ட மனு:கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட வீரவாஞ்சி நகா் முதல் தெருவில் மளிகைக்கு கடைக்கு அருகில் நகராட்சி சாா்பில் தரைப்பாலம் அமைக்கப்பட்டபோது, அவ்வழியாகச் செல்லும் கழிவுநீா் ஓடையை அடைபட்டுவிட்டது. இதனால், சாலையில் கழிவுநீா் தேங்கி நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் கழிவுநீா் தேங்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.