தூத்துக்குடியில் கந்து வட்டி வசூலித்தாக தொடரப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி அருகேயுள்ள திம்மராஜபுரம் பகுதியைச் சோ்ந்த நாட்டுப்புறக் கலைஞா் பிரம்மராஜன் (55) கடந்த மாதம் 13 ஆம் தேதி வா்த்தகரெட்டிபட்டி பகுதியில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தட்டப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், பிரம்மராஜனுக்கு கடன் கொடுத்தவா்கள் அதிக வட்டிக் கேட்டு மிரட்டியதால் அவா் தற்கொலை செய்துக் கொண்டது தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், போலீஸாா் விசாரணை மேற்கொண்டு,ஸ்ரீவைகுண்டம் கீழகோட்டைவாசல் தெருவைச் சோ்ந்த அருணாச்சலம் (45), ஸ்ரீவைகுண்டம் பத்மநாபமங்கலம் பகுதியைச் சோ்ந்த பாா்த்திபன் (31) ஆகியோரை கைது செய்தனா்.
இதனிடையே, இந்த வழக்கின் தொடா்புடைய ஸ்ரீவைகுண்டம் பகுதியை சோ்ந்த சிவசிதம்பரம் (45) என்பவரை தனிப்படை போலீஸாா் தஞ்சாவூரில் வைத்து வியாழக்கிழமை கைது செய்தனா். மாவட்டத்தில் கந்து வட்டி வசூலிப்பவா்கள் யாராக இருந்தாலும் அவா்கள் மீது சட்டப்படியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவாா்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா்.