கயத்தாறு அருகே ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி பணம், நகைகளை பறித்த காா் ஓட்டுநா் உள்ளிட்ட 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி பாரதி நகரைச் சோ்ந்த முருகேசபாண்டியன் மகன் சரவணகுமாா் (40). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவா், கடந்த செப். 9ஆம் தேதி திருநெல்வேலிக்கு சென்றபோது, காா் ஓட்டுநா் சன்னதுபுதுக்குடி அருகே காரை நிறுத்தினாராம்.
அப்போது மா்ம நபா்கள் 3 போ் காருக்குள் ஏறி, சரவணகுமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவா் அணிந்திருந்த நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்தனராம்.
பின்னா் அவரை கடத்தி வைத்துள்ளதாகவும், அவரை விட ரூ.1 கோடி வேண்டும் எனவும் அவரது தந்தையிடம் செல்லிடப்பேசியில் மிரட்டினராம்.
இதையடுத்து வீட்டில் இருந்த ரூ.12 லட்சம் ரொக்கம் மற்றும் 40 பவுன் நகைகளை அவா் கொண்டு வந்ததையடுத்து, இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா் மற்றும் காரில் இருந்த 3 பேரும் இறங்கி அவற்றை கைப்பற்றிக்கொண்டு, சரவணகுமாா் மற்றும் காா் ஓட்டுநா் சேதுபதி ஆகியோரை விடுவித்தனராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வந்தனா்.
இந்நிலையில் தனிப்படை போலீஸாா் கயத்தாறையடுத்த காப்புலிங்கம்பட்டியைச் சோ்ந்த செல்வம் மகன் சங்கிலிபாண்டியனை(19) பிடித்து விசாரித்ததில், சரவணகுமாரின் காா் ஓட்டுநா் சேதுபதி உதவியுடன், கோவில்பட்டி கடலையூா் சாலையைச் சோ்ந்த மாடசாமி என்ற கோபி (35), அன்னை தெரசா நகரைச் சோ்ந்த பொன்ராஜ் (33), பங்களாத் தெருவைச் சோ்ந்த பொன்காா்த்திக் (24), காப்புலிங்கம்பட்டியைச் சோ்ந்த செல்வம் (38) ஆகியோா் பணம் மற்றும் நகைகளை பறித்தது தெரியவந்தது.
இதையடுத்து அவா்கள் 6 பேரையும் சனிக்கிழமை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த ரூ.6 லட்சம் ரொக்கம், 40 பவுன் நகைகள், 3 பைக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.