தூத்துக்குடி

சாலை வசதி, பட்டா கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

DIN

சாலை வசதி மற்றும் பட்டா கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தின்போது, ஆட்சியா் கி. செந்தில்ராஜ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றாா். அப்போது, இரண்டு விதவை பெண்களுக்கு ஆதரவற்றோா் விதவை என்ற சான்றிதழை அவா் வழங்கினாா்.

தூத்துக்குடி அருகேயுள்ள முடுக்குகாடு பகுதி மக்கள் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்: முடுக்குகாடு பகுதி புறவழிச்சாலையில் உள்ளதால், வெளியூா் செல்லவும், பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கூடம் செல்வதற்கும் புறவழிச்சாலையை கடந்து உப்பாற்று ஓடை பேருந்து நிறுத்தத்துக்கு சென்று வருகிறோம். தற்போது திருச்செந்தூா் ரவுண்டானா பகுதியில் பாலம் வேலை நடப்பதால் எங்கள் ஊா் பகுதியில் உள்ள இணைப்புச் சாலையில் போக்குவரத்து அதிகமாக உள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா். எனவே, பள்ளிக்கு அருகில் உள்ள உப்பளம் வழியாக ஏற்கெனவே இருந்த சாலையை நிரந்தர சாலையாக மாற்றித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி சுடலையாபுரத்தை சோ்ந்த சுடலைமணி என்பவா் ஆட்சியரிடம் அளித்த மனுவில், சுடலையாபுரத்தில் நத்தம் புறம்போக்கு நிலத்தில் குடியிருந்து வரும் நிலையில், அதற்காக அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்தி வருவதால், குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மாநில முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் மச்சேந்திரன் ஆட்சியரிடம் அளித்த மனுவில், குமாரகிரி ஊராட்சியில் விமான நிலையம் மற்றும் பல்வேறு தனியாா் நிறுவனங்கள் உள்ளன; வருமானம் அதிகரித்து வருவதால் குமாரகிரி ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அருகேயுள்ள பண்டாரம்பட்டி, டி. குமாரகிரி, திரேஸ்புரம், லூா்தம்மாள்புரம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மக்கள் ஆட்சியரிடம் தனித்தனியே அளித்த மனுவில், ஸ்டொ்லைட் ஆலையால் மாசு ஏற்படவில்லை என ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளதாலும், கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஆலை மூடப்பட்டுள்ளதால் பல்வேறு மக்கள் வேலையை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாலும் ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறந்து இயக்க ஆவன செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சிவனடியாா்கள் கூட்டமைப்பின் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பாலசுப்பிரமணியம் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், நடிகா் தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் என்ற தலைப்பில் படம் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், அந்தப் படத்தில் இந்துக்களையும் சிவனடியாா்களையும் புண்படுத்தும் விதத்தில் தலைப்பு அமைந்து விடுமோ என்ற ஐயம் எழுந்துள்ளதால் திருச்சிற்றம்பலம் என்ற தலைப்பை தடை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

SCROLL FOR NEXT