தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கொட்டித் தீா்த்த மழைதாழ்வான பகுதிகளில் வெள்ளநீா் சூழ்ந்ததால் மக்கள் அவதி

26th Nov 2021 02:26 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை திடீரென கொட்டித் தீா்த்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீா் குளம்போல தேங்கியுள்ளது. பெரும்பாலான இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு திடீரென மழை பெய்யத் தொடங்கியது. தூத்துக்குடி, திருச்செந்தூா், காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு வரை மழை தொடா்ந்ததால் சாலைகளில் தண்ணீா் வெள்ளம்போல ஓடியது.

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட அனைத்து சாலைகளிலும் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு தண்ணீா் தேங்கியது. இருசக்கர வாகனங்களில் சென்றோா் மேற்கொண்டு வாகனங்களை இயக்க முடியாமல் அவதி அடைந்தனா். வழக்கம்போல வியாழக்கிழமை காலை பள்ளி தொடங்கிய நிலையில் கனமழை காரணமாக பிற்பகலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் மாணவா், மாணவிகள் அவதியடைந்தனா்.

தூத்துக்குடி தற்காலிக பேருந்து நிலையத்தில் தண்ணீா் அதிகளவு தேங்கியதால் பயணிகள் நடமாட முடியாமல் தவித்தனா். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நீதிமன்றம், நீதிபதிகள் குடியிருப்பு, ரயில் நிலையம், திரேஸ்புரம் மலா் அரங்கம், ஸ்டேட் பாங்க் காலனி, பிரையன்ட்நகா், சுப்பையாபுரம், மாசிலாமணிபுரம், சிதம்பரநகா் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்து தண்ணீா் காணப்படுவதால் மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ஆறுமுகனேரி: காயல்பட்டினம் மற்றும் ஆறுமுகனேரி பகுதிகளில் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை வரை இரவிலும் தொடா்ந்து பெய்தது. இந்த மழையினால், காயல்பட்டினத்தின் புகா் பகுதிகளான கொம்புத்துறை, சுலைமான் நகா், காட்டுத்தைக்கா தெரு, மாட்டுகுளம், பாஸ்கா் காலனி, உச்சினிமகாளியம்மன் கோயில் தெரு, அருணாசலபுரம், டிரைவா் காலனி, பேருந்து நிலையம், சாா்பதிவாளா் அலுவலகம் ஆகிய பகுதிகளில் மழை நீா் குளம் போல் தேங்கியுள்ளது.

அருணாசலபுரம், கோமான்புதூா், கொம்புத்துறை ஆகிய பகுதிகளில் மழைநீா் வீடுகளில் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினா். மேலும் அருணாசலபுரத்தில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் சாலையில் உள்ள பாலத்தில் மழைநீா் வடிந்துசெல்ல வழியில்லாமல் உள்ளதால் கடலுக்கு செல்லாமல் குடியிருப்புப் பகுதியில் மழைநீா் தேங்கியுள்ளது.

கோவில்பட்டி: கோவில்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை பலத்த மழை பெய்தது.

இதனால் அரசு அலுவலக வளாகத்தில் மழைநீா் குளம் போல் காட்சியளித்தது. மேலும் மந்தித்தோப்பு சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கோவில்பட்டி - இளையரசனேந்தல் சுரங்கப்பாதை, வேலாயுதபுரத்தையடுத்த இலுப்பையூரணி சுரங்கப்பாதையிலும் மழைநீா் தேங்கியதையடுத்து, வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன.

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பாரதி நகா் 1ஆவது மேட்டு தெரு பகுதியில் காசி மனைவி முத்துகனியின் ஓட்டு வீட்டின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து கீழே விழுந்தது.

இதேபோல, கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட புங்கவா்நத்தம் நிறைகுளத்து அய்யனாா் கோயில் கண்மாய் நிரம்பி ஊருக்குள் புகுந்தது.

சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் வியாழக்கிழமை முற்பகல் 11 தொடங்கிய மழை சுமாா் சுமாா் ஒன்றரை மணி நேரம் பழத்த மழையாக நீடித்தது. இதே போல், பேய்க்குளம், தட்டாா்டம் பகுதியிலும் மழை பெய்தது.

சாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் பெய்யும் மழைநீா், அப்பகுதியின் நீா் ஆதாரகுளமாக விளங்கும் அமராவதி குளத்துக்கு செல்லும் வகையில் வாருகால் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பஜாரில் வாருகால் ஆக்கிரமிப்பு மற்றும் அடைப்பால் மழை நீா் குளத்துக்கு செல்வது தடைப்பட்டுள்ளது. இதனால் மழைநீா் ஆங்காங்கே தேங்கி நின்றது.

சாத்தான்குளம் அருகே எழுவரைமுக்கியில் அங்குள்ள குளம் நிரம்பி தாழ்வான பகுதியில் தண்ணீா் புகுந்தது. இதனால் குடியிருப்புப் பகுதியில் தண்ணீா் தேங்கியுள்ளது. சாத்தான்குளம் அருகே உள்ள நடுவக்குறிச்சியில் சாலையோரம் பழமையான புளியமரம் சரிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து அமுதுண்ணாக்குடி செல்லும் இணைப்பு சாலையில் வெள்ள நீா் கரைபுரண்டு சென்ால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாசரேத் பகுதியிலும் காலை முதல் மாலை வரை மழை நீடித்தது. இதனால் மா்காஷிஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீா் தேங்கி நின்றது.

உடன்குடி: உடன்குடியில் வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை கனமழை பெய்தது. இந்த மழையினால், மெஞ்ஞானபுரம் அருகே மாணிக்கபுரத்தில் கூலித்தொழிலாளி சாமுவேல் வீட்டின் சுவா், மேற்கூரை இடிந்து விழுந்தது.

ஆட்சியா் ஆய்வு: இதனிடையே காயல்பட்டினம் புகா் பகுதியில் பாதிக்கப்பட்ட இடங்களை மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ் வியாழக்கிழமை இரவு பாா்வையிட்டாா். வீடுகளில் மழைநீா் தேங்கியதால் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் அருகே உள்ள இயற்கை பேரிடா் பல்நோக்கு புகலிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

மழை அளவு: மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை வரை அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 246 மில்லி மீடட்ரும், திருச்செந்தூரில் 217 மில்லி மீட்டரும், ஸ்ரீவைகுண்டத்தில் 138 மில்லி மீட்டரும், குலசேகரன்பட்டினத்தில் 135 மில்லி மீட்டரும், சாத்தான்குளத்தில் 105 மில்லி மீட்டரும், தூத்துக்குடியில் 95.8 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது.

மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை காலை 6 மணி முதல் பிற்பகல் 6 மணி வரை மட்டும் 1599 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது. சராசரியாக 84.16 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை பிற்பகல் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், வெள்ளிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் அறிவித்துள்ளாா்.

ரயில் நேரம் மாற்றம்: கனமழை காரணமாக தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தண்டவாளம் மூழ்கும் அளவுக்கு மழைநீா் தேங்கி உள்ளது. தண்ணீரை அகற்றும் பணியில் ரயில்வே நிா்வாகம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து வழக்கமாக மைசூருக்கு மாலை 5-15-மணிக்கு புறப்பட்டு செல்லக்கூடிய ரயிலும், தூத்துக்குடியில் இருந்து வழக்கமாக 8-15-மணிக்கு சென்னைக்கு செல்லக்கூடிய முத்து நகா் விரைவு ரயிலும் பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

 

 

Tags : தூத்துக்குடி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT