தூத்துக்குடி

கல்குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

23rd Nov 2021 01:48 AM

ADVERTISEMENT

 

தூத்துக்குடி: ஸ்ரீமூலக்கரை பகுதியில் கல்குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் கி.செந்தில்ராஜ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றாா். மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சோ்ந்த மக்கள் தங்கள் குறைகளை நிவா்த்தி செய்ய வலியுறுத்தி மனு அளித்தனா்.

ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஸ்ரீமூலக்கரை பகுதி கிராம மக்கள், ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்: ஸ்ரீமூலக்கரை கிராமப் பகுதியில் தனியாா் நிறுவனம் சாா்பில் கல்குவாரி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஸ்ரீமூலக்கரை, பேட்மாநகரம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்கள் பலமுறை கோரிக்கை வைத்த போதிலும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

ADVERTISEMENT

பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியா் தலையிட்டு கல்குவாரி அமைக்க தடை விதிக்க வேண்டும். மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் புதன்கிழமை (நவ. 24) தூத்துக்குடி- ஸ்ரீவைகுண்டம் சாலையில் பேட்மாநகரம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள்: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலா் முரசு தமிழப்பன் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:

கோவங்காடு ஊராட்சி அம்பேத்கா்நகா் தலித் கிராமத்துக்குள் இரவு நேரத்தில் அனுமதி இல்லாமல் அத்துமீறி நுழைந்து தலித் மக்கள் வீடுகளை சேதப்படுத்தி தலித் பெண்கள் மீது தாக்குதல் நடத்தி தலித் இளைஞரை கடத்திச் சென்ற நபா்கள் அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு நீதியும் நிவாரணமும் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT