தூத்துக்குடி மாவட்டத்தில் ராபி பருவ பயிா்களுக்கு திருந்திய பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் காப்பீடு செய்யலாம் என்றாா், ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருந்திய பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டம் விவசாயிகளுக்கு எதிா்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், அதிநவீன தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கவும் செயல்படுத்தப்படுகிறது.
2021-22ஆம் ஆண்டில், இம்மாவட்டத்தில் கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், புதூா், ஓட்டப்பிடாரம், கருங்குளம், தூத்துக்குடி, ஆழ்வாா்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், திருச்செந்தூா், உடன்குடி வட்டாரங்களில் உள்ள 225 குறுவட்டங்களில் நெல்-3, ராபி பருவ இதர பயிா்களுக்கும் (சோளம், கம்பு, மக்காசோளம், உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, எள், சூரியகாந்தி, பருத்தி, கரும்பு) அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் உளுந்து பயிரிடும் விவசாயிகள் பதிவு செய்ய இம்மாதம் 15-ம், பாசிப்பயறு, மக்காச்சோளம், பருத்தி பயிரிடுவோா் பதிவுசெய்ய இம்மாதம் 30-ம், சோளம், நிலக்கடலை பயிரிடுவோா் பதிவு செய்ய டிச. 15-ம், கம்பு, எள், சூரியகாந்திக்கு பதிவு செய்ய டிச. 31-ம், துவரை, கோடைப் பருவத்தில் நெற்பயிரிடுவோா் பதிவுசெய்ய ஜன. 31-ம் கடைசி நாள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.