தூத்துக்குடி

வணிகர்கள், தொழில் முனைவோருக்கு இடையூறு கொடுக்காத ஆட்சி அதிமுக

3rd Jan 2021 07:33 PM

ADVERTISEMENT

 

கோவில்பட்டி: வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு எவ்வித இடையூறும் கொடுக்காத கட்சி மற்றும் ஆட்சி அதிமுக என்றார் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் உள்ள மகாலட்சுமி திருமண மண்டபத்தில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில் வர்த்தக சங்க நிர்வாகிகளிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், நேஷனல் சிறுதீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பரமசிவம் பேசியது:   கோவில்பட்டியில் பொது பயன்பாட்டு மையம் அமைத்து, அதன் மூலம் தட்டுப்பாடு ஏற்படும் பொட்டாசியம் குளோரேட் தயாரிப்பு தொழிற்சாலை, டுப்லக்ஸ் கார்ட்போர்டு (காகித அட்டை)  தயாரிப்பு தொழிற்சாலை அமைத்திடவும், வெளி மாநிலங்களில் இருந்து தரமான பாப்புலர் மரம் இறக்குமதி செய்துதர வேண்டும்.

ADVERTISEMENT

கிராமங்களில் தொழில் தொடங்குவதற்கு அதிகபட்சம் 2 ஆயிரம் சதுரடி என்ற சட்டத்தை 10 ஆயிரம் சதுரடி வரை ஊராட்சி நிர்வாகமே அனுமதிக்க வேண்டும். பொதுப் பயன்பாட்டு மையம் அல்லது சிட்கோ மூலம் வெளிநாடுகளில் இருந்து தீக்குச்சி மரங்கள், மெழுகு போன்ற பொருள்களை இறக்குமதி செய்து தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு ஆவண செய்ய வேண்டும்.

3   மாதங்களுக்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியர் தலைமையில், தொழில் முனைவோருக்கான குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும். தீப்பெட்டிக்கு முக்கியப் பொருளான பொட்டாசியம் குளோரேட் மற்றும் சல்ஃபர் ஆகியவற்றை மாவட்டம் விட்டு மாவட்டம் கொண்டு வருவதற்கு மாவட்ட வருவாய் அலுவலரிடம் இருந்து பெற வேண்டிய தடையில்லா சான்றுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.

கிராமப்புறத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். தொழிற்சாலைகளில் ஏற்படுகின்ற சிறுசிறு விபத்துக்களுக்கு உரிமையாளர்கள் கைது செய்யும் நடைமுறையை தளர்த்த வேண்டும். 

தீப்பெட்டித் தொழிலாளர்களுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற வேண்டும் என்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

அதுபோல, தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஏ.பி.கே.பழனிசெல்வம் பேசுகையில், கோவில்பட்டியில் தொழிற்பூங்கா அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,   பட்டாசு, தீப்பெட்டித் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி மக்களின் பெரும்பாலான கோரிக்கைகளை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது.

கரோனா தொற்று காலத்துக்குப் பின் இந்தியாவிலேயே தமிழகம் தான் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. நல்ல பருவமழை பெய்துள்ளதால் விவசாயம் செழித்துள்ளது. மாவட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிமுக ஆட்சியில் தான் வியாபாரிகள், தொழில் முனைவோர்கள் பாதிப்பில்லாமல் தொழில் செய்யக்கூடிய நிலை உள்ளது. வியாபாரிகளுக்கு எந்த தொந்தரவும் கொடுப்பதில்லை. திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் கட்டப்பஞ்சாயத்து, மாமுல் உள்ளிட்டவை வந்துவிடும். எங்களது ஆட்சியிலும், கட்சியிலும் இது இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்.

வணிகர்கள், தொழில் முனைவோருக்கு எவ்வித இடையூறு கொடுக்காத கட்சியும், ஆட்சியும் அதிமுக தான். உங்கள் கோரிக்கைகளில் முடிந்தவற்றை பரிசீலனை செய்து நிறைவேற்றுவோம் என்றார் அவர்.

கூட்டத்தில், அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் செ.ராஜு, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகநாதன், தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஏ.பி.கே.பழனிசெல்வம், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த பரமசிவம், செல்வமோகன், கோபால்சாமி, வரதராஜன், ராஜு, சுரேஷ் உள்பட தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள், தொழில் வர்த்தக சங்க நிர்வாகிகள , தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT