தூத்துக்குடி

மக்களின் எண்ணங்களுக்கு ஏற்றவாறு அதிமுக அரசு செயல்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

3rd Jan 2021 04:27 PM

ADVERTISEMENT

 

கோவில்பட்டி: மக்களை சிந்தித்து மக்களின் எண்ணங்களுக்கு ஏற்றவாறு அதிமுக அரசு செயல்படும் என்றார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், வில்லிசேரியில் ஞாயிற்றுக்கிழமை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுடன் நடத்திய கலந்துரையாடலுக்குப் பின், அவர் பேசியது:   

விவசாயி என்றாலே உழைப்பாளி என்று பெயர். விவசாயி ஒருவர் தனது சொந்த காலில் உழைப்பில் நிற்பவர்கள். அந்த விவசாயிகள் பிரச்னை என்ன என்பதை அறிந்து அந்தப் பிரச்னையை தீர்க்க அரசு திட்டமிட்டு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

ADVERTISEMENT

விவசாயத்தின் முக்கியத் தேவையான நீரை சரியான முறையில் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதிமுக அரசு குடிமராமத்துப் பணி திட்டத்தைக் கொண்டு வந்தது. இத்திட்டத்துக்கு மக்களிடமும், விவசாயிகளிடமும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பல ஆண்டுகளாக தூர்வாராமல் இருந்த நீர்நிலைகள் மக்களின் பங்களிப்போடு தூர்வாரப்பட்டு, ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகாமல் காக்கப்பட்டு வருகிறது.

கடந்த 4  ஆண்டுகளில் ரூ.9,400  கோடி பயிர்க் காப்பீட்டுத் தொகை பெற்றுத் தந்த ஒரே மாநிலம் தமிழகம்.  விவசாயிகள் பாதிக்கப்படும்போது அதிமுக அரசு பாதுகாப்பு அரணாக இருந்து உதவி செய்யும். மக்காச்சோளப் பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் பாதிப்பு ஏற்பட்டபோது அதிமுக அரசு இழப்பீட்டுத் தொகையை வழங்கியது. இந்தாண்டு அமெரிக்கன் படைப்புழுவால் மக்காச்சோளப் பயிர் பாதிப்பு ஏற்படாமல் இருக்க பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்தது.

விவசாயத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் கால்நடை வளர்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கும் இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கால்நடைகளை ஊக்குவிப்பதற்காக அதிகமான கால்நடை மருத்துவமனைகள் அமைத்து மருத்துவர்களை நியமித்துள்ளோம். சேலம் மாவட்டம், தலைவாசல் கூட்டு ரோட்டில் ஆசியாவிலேயே மிக பிரம்மாண்ட கால்நடை பூங்கா, கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, இன்னும் 6 மாதத்தில் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

விவசாயத் தொழிலாளர்களுக்கு என்ன வேண்டும் என்பதைப் பார்த்து ஒரு குழந்தை வளர்ப்பது போல விவசாயிகளை வளர்த்துக் கொண்டுள்ளோம். விவசாயிகள் விரும்பும் கன்றுகளை ஈன்று கொடுக்கும் ஆராய்ச்சி நிலையம் ரூ.48 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படவுள்ளது.

விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக திண்டிவனத்தில் சுமார் ரூ.2ஆயிரம் கோடி மதிப்பீட்டில் உணவுப்பூங்கா ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. 

விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறி, பழங்களுக்கு நல்ல லாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் முதல் கட்டமாக 10  மாவட்டங்களில் தலா ரூ.20 கோடி மதிப்பீட்டில் குளிர்பதன கிடங்கு உருவாக்கப்படவுள்ளது.

கோவில்பட்டி வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு பூச்சிமருந்து ஆய்வகம் அமைக்கப்பட்டது. கால்நடை மருத்துவமனை வளாகத்தில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதன் பயனாக, இந்தாண்டு அரசுப் பள்ளியில் பயின்ற 313 பேர் மருத்துவம் பயிலவும், 92 பேர் பல் மருத்துவம் பயிலவும் சேர்ந்துள்ளனர். மேலும், புதிய 11  மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளதையடுத்து, அடுத்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் 443  பேர் மருத்துவப் படிப்பில் சேரவுள்ளனர். 150  பேர்  பல் மருத்துவப் படிப்பில் சேரவுள்ளனர். இவர்களுக்கான கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்கும். விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் குழந்தைகளும் மருத்துவர் ஆக வேண்டும் என்பது தான் எங்களது லட்சியம்.

திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு கூட்டத்தில் பேசும்போது, ரவுடி தான் தன்னை பெருமைப்படுத்த ரவுடி எனக் கூறுவார்கள். அதுபோல, எடப்பாடி பழனிசாமி விவசாயி என தன்னையே பெருமைப்படுத்துகிறார் எனக் கூறியுள்ளார். ஒரு விவசாயி தன்னை விவசாயி எனக்கூறுவதில் என்ன தப்பு இருக்கிறது ?  விவசாயியை ரவுடியுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார். இது மிகவும் வேதனையாக இருக்கிறது. ரவுடியும், விவசாயியும் ஒன்றா? இரவு, பகல் என்று பாராமல் உழைக்கின்றவர் விவசாயி. கஷ்டமே தெரியாமல் வளர்ந்தவருக்கு விவசாயியைப் பற்றி என்ன தெரியும் ?  அதனால் தான் ரவுடியோடு ஒப்பிட்டுப் பேசுகிறார். எதைப் பேசினாலும் சிந்தித்துப் பேச வேண்டும்.

விவசாயிகளின் மனம் புண்படும்படி இனியாவது திமுக தலைவர் பேச வேண்டாம் என விவசாயிகள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

விவசாயிகள் பாதிக்கப்படும்போது அவர்களுக்காக நாங்கள் துணை நிற்போம். விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற விளைப் பொருள்களை அரசாங்கமே கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்கும். இதனை எதிர்காலத்தில் செய்ய உள்ளோம். 

நான் முதல்வராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறேன். ஒருபுறம் கட்சியைக் காப்பாற்ற வேண்டும். ஒருபுறம் ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும். தினமும் ஸ்டாலின் கட்சியை உடைக்க வேண்டும். ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என பிரச்னையை உருவாக்கிக் கொண்டிருந்தார். அதனை முறியடித்த கட்சி, ஆட்சி அதிமுக அரசுதான்.

மக்களை சிந்தித்து மக்களின் எண்ணங்களுக்கு ஏற்றவாறு அதிமுக அரசு செயல்படும். உழவர் பெருமக்களின் எதிர்காலம் சிறக்க தொடர்ந்து பாடுபடுவோம் என்றார்.

அப்போது, தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,  செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி சத்யா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி கஸ்தூரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முன்னதாக, விவசாயி பாலமுருகன் பேசுகையில்,   விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர், மாணவிகளுக்கு வேளாண்மை பொறியியல் கல்லூரியில் படிப்பதற்கு உள்ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT