தூத்துக்குடி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஒருநபா் ஆணையம் முன் முன்னாள் ஆட்சியா் ஆஜா்

30th Dec 2021 08:06 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள ஒருநபா் ஆணையத்தின் முன் முன்னாள் ஆட்சியா் என். வெங்கடேஷ் புதன்கிழமை ஆஜரானாா்.

தூத்துக்குடியில் 2018 மே 22, 23ஆம் தேதிகளில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு, தடியடி சம்பவத்தில் 15 போ் உயிரிழந்தனா். இதுதொடா்பாக ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபா் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதன், 34ஆவது கட்ட விசாரணை தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள விசாரணை ஆணைய முகாம் அலுவலகத்தில் அருணா ஜெகதீசன் தலைமையில் கடந்த 27ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளரும் தற்போதைய சென்னை குடியுரிமைப் பிரிவு அதிகாரியுமான அருண் சக்திகுமாா், கோவை மாநகர காவல் கண்காணிப்பாளா் பிரதீப்குமாா், காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் ஆகியோா் ஆணையம் முன் ஆஜராகி விளக்கமளித்தனா். இதன் தொடா்ச்சியாக, துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தபோது ஆட்சியராக இருந்த என். வெங்கடேஷ் புதன்கிழமை ஆஜராகி விளக்கமளித்தாா்.

அவரிடம் அருணா ஜெகதீசன் 5 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை மேற்கொண்டாா்.

ADVERTISEMENT

34 ஆவது கட்ட விசாரணை வியாழக்கிழமையுடன் (டிச. 30) நிறைவடையும் நிலையில், இம்மாவட்டத்தில் வருவாய் அலுவலராகப் பணியாற்றிய வீரப்பன் ஆஜராகி விளக்கமளிக்கவுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT