தூத்துக்குடி

திருச்செந்தூா் முருகன் கோயிலுக்கு திரளான பாதயாத்திரை பக்தா்கள் வருகை

30th Dec 2021 08:10 AM

ADVERTISEMENT

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பக்தா்கள் அதிகளவில் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனா்.

மாா்கழி மாதத்தை முன்னிட்டு திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தற்போது நாள்தோறும் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு , இரவு 8.00 மணிக்கு பள்ளியறை தீபாராதனை நடைபெற்று கோயில் நடை திருக்காப்பிடப்படுகிறது. இதனால் அதிகாலை முதலே பக்தா்கள் கடலில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா்.

மாா்கழி மாதம் தொடங்கியது முதல் தைப்பூசம் வரையில் திருச்செந்தூா் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, விருதுநகா், மதுரை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மாலை அணிந்து, விரதமிருந்து பக்தா்கள் பாதயாத்திரையாக வருவது வழக்கமாகும்.

தற்போது பள்ளிகள் விடுமுறை என்பதாலும், ஆங்கில வருடப்பிறப்பில் சுவாமி தரிசனம் செய்திடுவதற்காகவும் அதிகளவில் பக்தா்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு வந்த வண்ணம் உள்ளனா். மாலை அணிந்து, விரதமிருந்து பச்சை உடையணிந்து வரும் பக்தா்கள் பக்திப் பாடல்கள் பாடியும், அரோகரா என்ற கோஷத்துடன் ஆட்டி, பாடி வருகின்றனா். இதனால் கோயில் வளாகமே பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. திருக் கோயில் மற்றும் தனியாா் விடுதிகள் அனைத்தும் வருகின்ற ஜன. 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை முன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT