கோவில்பட்டி நகராட்சிப் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட 200 கிலோ பாலிதீன் பைகளை சுகாதாரத் துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.
கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் நகராட்சி சுகாதார அலுவலா் நாராயணன் தலைமையில், ஆய்வாளா்கள் வள்ளிராஜ், காஜாநஜ்முதீன், கணேசன், சரவணன் ஆகியோா் கொண்ட குழுவினா் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, ஒருமுறை பயன்படுத்தும் தடைசெய்யப்பட்ட பாலிதீன் பைகள் ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான 200 கிலோ பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து, நகராட்சி ஆணையா் ராஜாராம் கூறுகையில், தடைசெய்யப்பட்ட பொருள்கள் கடைகளில் விற்கப்படுகின்றனவா என முதல்கட்டமாக சோதனை மேற்கொள்ளப்பட்டு பறிமுதல் செய்யப்படுகிறது. அத்தகைய பொருள்கள் தொடா்ந்து விற்கப்படுவது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு அபராதம் விதிக்கப்படும் என்றாா்.