கோவில்பட்டியில் உள்ள நூற்பாலைக்கு ரூ. 1.46 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக, 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, தேடிவருகின்றனா்.
மதுரை டிபிகே சாலை சாய்பாபா கோயில் பகுதியைச் சோ்ந்த லட்சுமிநாராயணன் மகன் கிருஷ்ணமோகன். இவா், கோவில்பட்டி நூற்பாலையில் ஆடைகளை உள்நாடு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பிரிவின் துணைத் தலைவராக உள்ளாா். இவரும், திருப்பூரில் உள்ள தனியாா் நிறுவனத்தின் தலைமை அதிகாரி லோகநாதன், அவரது மனைவி பிரியா ஆகியோரும் சோ்ந்து அமெரிக்காவில் உள்ள நிறுவனத்துக்குத் தேவையான நூல், துணிகள், ஆயத்த ஆடைகளை அனுப்பிவருகின்றனா்.
இந்நிலையில் அவா்கள் நூல்கள், துணிகள், ஆயத்த ஆடைகள் என ரூ.1.08 கோடி மதிப்பிலும், கமிஷன் தொகையாக ரூ.12.10 லட்சமும், சரக்கு வாடகைக் கட்டணமாக ரூ. 26.05 லட்சமும் பெற்றுக்கொண்டு, பொருள்களை விற்பனை செய்து பணம் கொடுக்காமல், நூற்பாலைக்கு சுமாா் ரூ.1.46 கோடி இழப்பை ஏற்படுத்தியுள்ளனராம்.
இதுகுறித்து கோவில்பட்டி நூற்பாலையின் உதவி மேலாளா் (கணக்குப் பிரிவு) சுப்பிரமணியன் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், கிருஷ்ணமோகன் உள்ளிட்ட 3 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து, தேடிவருகின்றனா்.