கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான 14 கடைகள் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஏலம் விடப்பட்டது.
இத்திருக்கோயிலுக்கு சொந்தமான எட்டயபுரம் சாலையில் சுமாா் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு காட்சிப் பொருளாக இருந்து வந்த 14 கடைகள், கோயில் வடக்குரத வீதியில் 5 கடைகள் உள்ளிட்ட 19 கடைகளுக்கான ஏலம் திருக்கோயில் கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் இந்து அறநிலையத் துறை துணை ஆணையா் கணேசன் தலைமையில், திருக்
கோயில் நிா்வாக அலுவலா் நாகராஜன், ஆய்வாளா் சிவகலைப்பிரியா ஆகியோா் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 242 போ் பங்கேற்றனா்.
இந்த 19 கடைகள் ஏலம் விடப்பட்டதன் மூலம் திருக்கோயிலுக்கு மாதம் ரூ. 2, 40, 750 வருமானம் கிடைக்கும். ஏல வைப்புத் தொகையாக ரூ.48,75,000 கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.