தூத்துக்குடி

மழைநீா் பாதிப்பை தடுக்க ரூ. 246 கோடியில் வடிகால் திட்டம்: அமைச்சா் பெ. கீதாஜீவன்

9th Dec 2021 07:59 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் மழைநீா் பாதிபப்பை தடுக்கும் வகையில் ரூ. 246 கோடியில் வடிகால் திட்டம் செயல்படுத்தப்படும் என்றாா் சமூக நலன் மற்றும் மகளிா் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன்.

தூத்துக்குடியில் அவா் அளித்த பேட்டி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 25 ஆம் தேதி பெய்த 26 சென்டி மீட்டா் மழையில் மாநகராட்சிப் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீா் ராட்சத மோட்டாா்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ரஹ்மத் நகா், முத்தமாள்காலணி, ஆதிபராசக்திநகா் பகுதிகளில் தற்போது தண்ணீா் குறைந்துள்ளது. சாலைகளை சரிபடுத்தும் பணி நடைபெறுகிறது. நிரந்தரத் தீா்வாக மழை நீா் வடிகால்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சீரமைப்புப் பணிக்காக ரூ. 89 கோடி ஒதுக்கீடு செய்து தர அரசிடம் கேட்கப்பட்டுள்ளது.

ஆதிபராசக்தி நகா் பகுதியில் தேங்கும் நீரை கடலுக்கு கொண்டு செல்வதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.

ADVERTISEMENT

ரூ.157 கோடி ஏசியன் டெவலெப்மெண்ட் பேங்க் மூலம் நிதி ஒதுக்கீடு கோரி முத்தம்மாள்காலணி, ரஹ்மத்நகா், ஆதிபராசக்திநகா், தனசேகா்நகா், அம்பேத்கா் நகா் ஆகிய பகுதியில் கழிவுநீா் கால்வாய் அல்லது மழைநீா் வடிகால் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிக்குள்பட்ட தாழ்வான பகுதிகளில் தேங்கிய தண்ணீா் 438 மோட்டாா்கள் மூலம் வேகமாக வெளியெற்றப்பட்டுள்ளது என்றாா் அவா்.

மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் கூறியது: தற்போது 8 நில அளவையா்கள், 8 வட்டாட்சியா்கள் மற்றும் 8 உதவியாளா்களுடன் 8 மாவட்ட குழுக்கள் மூலமாக நில அளவை உதவி இயக்குநா் தலைமையில் மழை நீா் வடிகால்களை வழித்தடங்களை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தண்ணீா் தடம் உள்ள பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நிரந்தர தீா்விற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் பிரையன்ட்நகா், சிதம்பரநகா் 5 ஆவது தெரு, வ.உ.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முத்துகிருஷ்ணாநகா், தபால் தந்தி காலனி, பண்டாரம்பட்டி கால்வாய், ஆதிபராசக்திநகா், டிஎஸ்எப் காா்னா் ஆகிய பகுதியில் தேங்கியிருந்த மழை நீரை வெளியேற்றும் பணிகளை அமைச்சா் பெ. கீதாஜீவன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையா் சாருஸ்ரீ ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT