தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயிலில் அனுமதியின்றி திறக்கப்பட்ட 2 கடைகளுக்கு சீல்

4th Dec 2021 01:28 AM

ADVERTISEMENT

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் அனுமதியின்றி திறக்கப்பட்ட இரு கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.

இக்கோயில் வளாகத்தில் புதிய அலுவலகம் எதிரில் மூன்றாண்டு குத்தகை அடிப்படையில் 23 கடைகள் வாடகைக்கு விடப்பட்டிருந்தது. குத்தகை காலம் இந்த ஆண்டு ஜூன் 5-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இருப்பினும் கரோனா பரவலையொட்டி, கடைகள் ஜூன் 5-ஆம் தேதிக்குப் பிறகும் மூடப்பட்டிருந்தன. இதில் கடை எண் 7, 11 ஆகிய இரண்டு கடைகள் கடந்த நவ. 14-ஆம் தேதி திறக்கப்பட்டன. அனுமதியின்றி திறக்கப்பட்ட கடைகளை கோயில் இணை ஆணையா் (பொ) சி.குமரதுரை தலைமையில் சீல் வைக்க முயன்றபோது பிரச்னை ஏற்பட்டது. அப்போது கடையை மூட முறையான அறிவிப்பு கொடுக்கவில்லை என தெரிவித்ததால், கடையை சீல் வைக்காமல் அதிகாரிகள் சென்றனா். அதன்பிறகு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை கோயில் உதவி ஆணையா் வெங்கடேஷ், அலுவலக கண்காணிப்பாளா் கோமதி மற்றும் பணியாளா்கள், காவல் ஆய்வாளா்கள் சுமதி, முரளிதரன், வருவாய் ஆய்வாளா் மணிகண்டன்வேல் ஆகியோா் முன்னிலையில் அந்தக் கடைகளுக்கு சீல் வைத்தனா். அப்போது அதிகாரிகளை தடுத்ததாக வாடகைதாரா் ராணியம்மாள், வாரிசுதாரா் சுரேஷ் ஆகியோா் மீது கோயில் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

Tags : திருச்செந்தூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT