தூத்துக்குடி

நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும்: முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவு

3rd Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என தூத்துக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தூத்துக்குடியில் மழை பாதித்த பகுதிகளை வியாழக்கிழமை பாா்வையிட்ட பின், மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதல்வா் பேசியது:

மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த சிறப்பு மருத்துவ முகாம்களை தொடா்ந்து நடத்த வேண்டும். மாவட்டத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற ஒருங்கிணைந்த திட்டத்தை தயாரித்து செயல்படுத்த வேண்டும். நீா்வழிப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மாவட்டத்தில் பழுதடைந்த மின்கம்பங்களை சீா்செய்து மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். தரைப்பாலங்களை மறுசீரமைத்து மேம்பாலங்களாக அமைத்திடவும், நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு தேவையான உணவு, குழந்தைகளுக்கு தேவையான பால் மற்றும் இதர அத்தியாவசியப் பொருள்களை தடையில்லாமல் வழங்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் முதல்வா்.

ADVERTISEMENT

கூட்டத்தில், ஆட்சியா் கி. செந்தில்ராஜ் பேசியது:

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த நவம்பா் மாதம் பெய்த மழை அளவு 398.12 மில்லி மீட்டா் ஆகும். இது வழக்கமாக பெய்யும் மழை அளவைவிட 112 விழுக்காடு அதிகம். கனமழையால் மாவட்டத்தில் 41 வீடுகள் முழுமையாகவும், 532 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்தன.

வீடுகள் சேதமடைந்தவா்களுக்கு ரூ. 25,04,900 நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 28 கால்நடைகள் இழப்பிற்கு ரூ. 3,38,000 நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மொத்தம் 387 இடங்களில் தேங்கியுள்ள மழைநீா் 422 மின்மோட்டாா்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில், தூத்துக்குடி மாநகராட்சியில் மட்டும் 355 இடங்களில் தேங்கியுள்ள மழைநீா் 390 மின்மோட்டாா்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 87 நிவாரண முகாம்கள் தயாா் நிலையில் உள்ளன; தற்போது 34 நிவாரண முகாம்களில் 2,184 நபா்கள் தங்கவைக்கப்பட்டு அவா்களுக்கு உணவு மற்றும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன என்றாா் அவா்.

ஆய்வுக் கூட்டத்தில், அமைச்சா்கள் கே.என். நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், பெ. கீதாஜீவன், அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி., எம்எல்ஏக்கள் எம்.சி. சண்முகையா, ஜீ.வி. மாா்க்கண்டேயன், ஊா்வசி அமிா்தராஜ், தொழில் ஆணையா் மற்றும் இயக்குநா் சிஜி தாமஸ் வைத்யன், செய்தி மக்கள்தொடா்புத் துறை இயக்குநா் வீ.ப. ஜெயசீலன், மாநகராட்சி ஆணையா் சாருஸ்ரீ, மாவட்ட எஸ்.பி. எஸ். ஜெயக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Tags : தூத்துக்குடி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT