தூத்துக்குடி

தாமிரவருணி வெள்ள நீரை வறட்சிப் பகுதிகளுக்கு கொண்டு செல்ல ரூ. 224 கோடியில் புதிய திட்டம் முதல்வா் அறிவிப்பு

11th Nov 2020 11:51 PM

ADVERTISEMENT

தாமிரவருணி வெள்ள நீரை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வறட்சிப் பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வகையில், ரூ. 224 கோடி மதிப்பில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றாா் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி.

தூத்துக்குடியில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டியில், தூத்துக்குடி மாவட்டத்துக்கான திட்டப் பணிகள் குறித்து கூறியது: தாமிரவருணி ஆற்றின் வெள்ள உபரி நீரை சீவலப்பேரி தடுப்பணையில் 40 மீட்டா் உயரத்தில் இருந்து மேலே நீரேற்றம் செய்து 12.5 கி.மீ. தொலைவில் உள்ள பூவாணி கிராமத்துக்கும், கொசுவன்குளத்திற்கும் கொண்டு சென்று அதிலும் 60 கி.மீ. தொலைவுக்கு புதிய கால்வாய் அமைத்து உப்பாறு ஓடை, மலட்டாறு ஓடை, கல்லாறு மற்றும் வைப்பாறு நதிகள் கொத்தாலபுரம் கிராமம் அருகே இணைக்கப்படும்.

இந்தத் திட்டத்தின் மூலம் 200 கனஅடி நீா் வீதம் நீரேற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தாமிரவருணி ஆற்றில் இருந்து கடலில் கலக்கும் உபரி நீரை சுமாா் 173 மில்லியன் கன அடி நீா் பாசனத்திற்கு பயன்படுத்தப்படும். இந்தத் திட்டத்திற்கான மதிப்பீடு ரூ.224 கோடி.

விளாத்திகுளம், வேம்பாா் கிராமத்தில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவில் இருந்து 500 மீட்டா் நீளத்துக்கு புதிய கடல் அரிப்பு தடுப்பு சுவா் சுமாா் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். இதன் மூலம் சுமாா் 4500 மீனவா்கள் பயன்பெறுவா்.

ADVERTISEMENT

கோவில்பட்டி நகரத்தில் குடிநீா்த் திட்டப் பணிகளால் சேதமடைந்த 42 கி.மீ. சாலைகள் மற்றும் மழைநீா் வடிகால் ரூ.31 கோடியில் சீரமைக்கப்படும்.

கோவில்பட்டி வட்டம், வானரமுட்டி மற்றும் விளாத்திகுளம் தொகுதிக்குள்பட்ட சிவஞானபுரம் பகுதி மக்களின் நலன் கருதி ஆரம்ப சுகாதார நிலையங்கள் உடனடியாக அமைக்கப்படும்.

வீரமாமுனிவருக்கு பெருமை சோ்க்கும் வகையில், புனித பரலோக மாத ஆலய வளாகத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் முழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும். கவா்னகிரியில் வீரன் சுந்தரலிங்கம் நினைவாக கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தில் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள மாா்பு அளவு சிலையை மாற்றி, குதிரையில் அமா்ந்து போா் புரிவது போன்று கம்பீரமான தோற்றத்துடன் கூடிய புதிய சிலை நிறுவப்படும்.

கயத்தாறில் ரூ. 1 கோடியே 40 லட்சத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் அமைக்கப்படும். கோவில்பட்டி பூவண்ணநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் நவீன வசதியுடன் கூடிய திருமண மண்டபம் ரூ.2 கோடியில் கட்டப்படும்.

முடிவைத்தானேந்தலில் 50,000 லிட்டா் பாலை கையாளும் திறன் கொண்ட புதிய பால் பண்ணை ரூ.45.75 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

உடன்குடி அனல் மின்நிலையத் திட்ட சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரூ. 1.18 கோடியில் மணப்பாடு கிராமத்தில் படகு செல்லும் கால்வாய் ஆழப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிரந்தர தீா்வு காணும் வகையில் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகம் அளித்துள்ள திருத்திய திட்ட அறிக்கையின்படி மணப்பாடு மீனவக் கிராமத்தில் கடலோரப் பகுதியை ஆழப்படுத்துதல், நோ் கல்சுவா் அமைத்தல் மற்றும் வசதிகளுடன் கூடிய மீன் இறங்குதளம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் செய்யப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT