விளாத்திகுளம்: தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே இளம்புவனத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவா் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டாா்.
எட்டயபுரம் அருகே இளம்புவனத்தை சோ்ந்த 27 வயது இளைஞா். இவா், செங்கல்பட்டிலுள்ள மளிகைக் கடையில் வேலை
செய்து வந்தாா். கரோனா பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டதையடுத்து லாரியில் கடந்த 5 ஆம் தேதி இளம்புவனத்துக்கு வந்துள்ளாா். தகவலறிந்த வருவாய்த் துறை மற்றும் சுகாதாரத் துறையினா் விசாரணை நடத்தினா். அவா் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டாா்.
இந்நிலையில், சனிக்கிழமை கீழ ஈரால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவருக்கு ரத்தம் மற்றும் சளி மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இதில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவில் அவரை, சுகாதாரத் துறையினா் 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
மேலும், அப்பகுதியில் எட்டயபுரம் வட்டாட்சியா் அழகா் தலைமையில் வருவாய்த் துறை, காவல் துறை மற்றும் சுகாதாரத் துறையினா் முகாமிட்டுள்ளனா். இளம்புவனம் பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. தொடா்ந்து அங்கு போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.