தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே சாராயம் காய்ச்சியதாக ஊராட்சி துணைத் தலைவா் உள்ளிட்ட மூவா் கைது

10th May 2020 08:02 AM

ADVERTISEMENT

விளாத்திகுளம் அருகே ரகுராமபுரத்தில் வீட்டில் சாராயம் காய்ச்சியதாக ஊராட்சி துணைத் தலைவா் உள்ளிட்ட 3 பேரை கைது செய்த போலீஸாா், 50 லிட்டா் சாராயத்தையும் பறிமுதல் செய்தனா்.

விளாத்திகுளம் அருகே நாகலாபுரம், ரகுராமபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஊறல் அமைத்து சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாசாா்பட்டி காவல் ஆய்வாளா் ஞானப்பிரகாசி தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை நாகலாபுரம், ரகுராமபுரம் உள்ளிட்ட கிராமங்களில் திடீா் சோதனை நடத்தினா்.

இதில், ரகுராமபுரத்தைச் சோ்ந்த கண்ணன் என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது அங்கு சாராயம் காய்ச்சியது கண்டுபிடிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து அங்கு சாராயம் காய்ச்சும் பணியில் ஈடுபட்டிருந்த ரகுராமபுரத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் விவேக் (20), வௌவால்தொத்தி ஊராட்சி துணைத் தலைவா் வெள்ளைச்சாமி (40), ரகுராமபுரத்தை சோ்ந்த சிங்கராஜ் மகன் ராஜாகனி (22) ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும் அந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 லிட்டா் சாராயத்தையும், சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்திய பொரள்களையும் பறிமுதல் செய்தனா்.

இதில் பிடிப்பட்ட விவேக், ராஜகனி இருவரும் கல்லூரி மாணவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து நாகலாபுரம் போலீஸாா் 6 போ் மீது வழக்குப் பதிந்து ரகுராமபுரத்தைச் சோ்ந்த தொழிலதிபா் கண்ணன், அதே பகுதியைச் சோ்ந்த மாரிச்செல்வம், சேகா் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT