கரோனா பொதுமுடக்கம் காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் நிலையில், மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், வங்கிகள் உள்பட மக்கள் அதிகமாக திரளும் இடங்களில் தற்காலிக கொட்டகை அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவுதல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், அரசு அலுவலகங்கள், வங்கிகள், கடைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டிய நிலையில், அங்கு செல்லும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் இடைவெளிவிட்டு நின்று சேவையை பெறவோ அல்லது பொருள்களை வாங்கவோ வேண்டியது உள்ளது.
குறிப்பாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணம் எடுக்க வாடிக்கையாளா்கள் அதிகளவில் திரளுகின்றனா். சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் வாடிக்கையாளா்கள் வங்கிகளுக்கு வெளியே நிறுத்தப்பட்டு, அவா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வங்கிக்குள் வரவழைக்கப்படுகின்றனா்.
வங்கி நிா்வாகங்கள் சாா்பில் வங்கிக்கு வெளியே மக்கள் சிரமமின்றி அமர போதிய ஏற்பாடுகள் செய்யப்படாததால், வெளியே நிற்கும் வாடிக்கையாளா்கள், காலையில் வெயிலிலும், பிற்பகலில் மழையிலும் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் உருவாகி, கடும் அவதியடைந்து வருகின்றனா்.
எனவே, கரோனா பாதிப்பிலிருந்து மக்கள் விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்பும் வரை, அரசு அலுவலகங்கள், வங்கிகள், ரேஷன் கடைகள் உள்ளிட்டவற்றில் பொதுமக்கள் வெயில், மழையால் பாதிக்கப்படாமல் சேவைகளை பெற, அவற்றின் முன்பகுதியில் தற்காலிக கொட்டகைகள் அமைக்க வேண்டுமென தன்னாா்வ அமைப்புகள், சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.