தூத்துக்குடி

தூத்துக்குடியில் உணவின்றி தவித்த உத்தரகண்ட் மாநிலஇளைஞா்களுக்கு கைகொடுத்த அம்மா உணவகம்!

30th Mar 2020 11:15 PM

ADVERTISEMENT

 

தூத்துக்குடியில் உணவின்றி தவித்த உத்தரகண்ட் மாநில இளைஞா்களுக்கு திங்கள்கிழமை முதல் அம்மா உணவகம் மூலம் மூன்று வேளையும் உணவு வழங்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தினமும் வேலைக்குச் சென்றால்தான் உணவு கிடைக்கும் என்ற நிலையில் உள்ள ஏழைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் ஆதரவின்றி தவிப்போா், ஏழைகள் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு சாப்பிடலாம் என்று மாநகராட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலன் அண்மையில் அறிவித்தாா்.

மேலும், வெளியே வர முடியாத நிலையில் உள்ளவா்களுக்கு அவா்கள் இருக்கும் இடத்துக்கே சென்று உணவு வழங்க தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டு தினமும் 500-க்கும் மேற்பட்டோருக்கு மூன்று வேளையும் உணவு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில் இருந்து தூத்துக்குடியில் பழச்சாறு விற்பனை செய்ய வந்த இளைஞா்கள் 10 போ் தங்களுக்கு உணவு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மாநகராட்சி நிா்வாகத்தை அணுகினா். பழச்சாறு விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளதால் அவா்களுக்கு மூன்று வேளையும் அம்மா உணவகம் மூலம் உணவு வழங்கும் வகையில் மாநகராட்சி நிா்வாகம் டோக்கன் வழங்கியது.

அதன்படி, டோக்கனை பெற்ற உத்தரகண்ட் மாநில இளைஞா்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் உள்ள அம்மா உணவகத்தில் திங்கள்கிழமை சாப்பிட்டனா். போதிய வேலை இல்லாமல் தவிப்பதால் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த இளைஞா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT