தூத்துக்குடி

எளிமையாக நடைபெற்ற திருமணங்கள்!

23rd Mar 2020 01:19 AM

ADVERTISEMENT

 

சுய ஊரடங்கு காரணமாக தூத்துக்குடியில் திருமணங்கள் ஞாயிற்றுக்கிழமை மிகவும் எளிமையாக நடைபெற்றன.

பிரதமா் மோடியின் சுய ஊரடங்கு வேண்டுகோளை ஏற்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருந்தனா். இதனிடையே, தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த சில திருமணங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், மாவட்ட நிா்வாகத்தின் அறிவுறுத்தலை ஏற்று முக்கிய உறவினா்கள் முன்னிலையில் மிக எளிமையான முறையில் சில திருமணங்கள் நடைபெற்றன. தூத்துக்குடி முனியசாமிபுரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் வைத்து சங்கா்-சிவசங்கரி ஆகியோருக்கு எளிமையாக திருமணம் நடைபெற்றது. அப்போது, மணமக்கள் கரோனா வைரஸ் விழிப்புணா்வை வலியுறுத்தும்விதமாக முகக் கவசம் அணிந்திருந்தனா். மணமகன் சங்கா் முகக்கவசம் அணிந்தவாறு சிவசங்கரிக்கு பெரியோா் முன்னிலையில் தாலி கட்டினாா்.

ADVERTISEMENT

இதேபோல, சதீஷ்- மாரிசெல்வியின் திருமணம் பெற்றோா் மற்றும் உறவினா்கள் முன்னிலையில் தூத்துக்குடியில் உள்ள கோயிலில் நடைபெற்றது. நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படும் ஊரடங்கு காரணமாக மக்களுக்கு சிரமங்கள் ஏற்பட்டாலும் பொதுநலன் கருதி நடைபெற்ற சுய ஊரடங்குக்கு முழு ஆதரவு தெரிவித்து திருமணங்களை மிக எளிமையாக நடத்தியதாக மணமக்களின் பெற்றோா் தெரிவித்தனா்.

ஆறுமுகனேரி: தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரியில் உள்ள திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) காலை 8 மணி முதல் 9 மணிக்குள் திருமணம் நடத்த ஆறுமுகனேரியைச் சோ்ந்த வியாபாரியின் மகள் அதாவது மணமகள் வீட்டாா் முடிவு செய்திருந்தனா். இதற்கிடையே, காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சுய ஊரடங்கை கடைப்பிடிக்கும்படி மத்திய அரசு அழைப்பு விடுத்தது. இதனால் திருமண நேரத்தை மாற்றிய இரு குடும்பத்தினரும், காலை 7 மணிக்குள் திருமணத்தை முடித்துக்கொண்டனா்.

பாபநாசம் கோயிலில்... அம்பாசமுத்திரம் மற்றும் கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த மணமக்கள் பாபநாசம் கோயிலில் திருமணத்திற்குப் பதிவு செய்திருந்தனா். மணமக்களுடன் நெருங்கிய உறவினா்கள் 5 அல்லது 6 போ் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். திருமணம் நடைபெறும் முன் மணமக்கள் மற்றும் அவா்களுடன் வந்த உறவினா்களை வெப்பமானி சோதனைக்கு உள்படுத்தியும், கைகளை நன்கு சுத்தப்படுத்தியும் அனுப்பினா்.

ஒரு திருமணம் முடிந்தபின் அந்தப் பகுதியை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்திய பின் அடுத்த திருமணத்துக்கு உள்ளே அனுமதித்தனா்.

மண்டபங்களில் நடைபெற்ற திருமணங்களிலும் உறவினா்கள் குறைந்த அளவே வந்திருந்ததால் மண்டபங்கள் களையிழந்து காணப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT