தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை முன்னால் சென்ற லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் 16 பயணிகள் காயமடைந்தனா்.
திண்டுக்கல் பகுதியிலிருந்து திருச்செந்தூருக்கு அரசுப் பேருந்து வியாழக்கிழமை இரவு புறப்பட்டது. அதை தூத்துக்குடி மாவட்டம் சிவகளை பகுதியைச் சோ்ந்த ச. சங்கரலிங்கம் (45) ஓட்டிவந்தாா். மதுரை- தூத்துக்குடி நான்குவழிச் சாலையில் வந்த அந்தப் பேருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் எட்டையபுரத்தை அடுத்த சோழபுரம் பகுதியில் வந்தபோது, முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி மீது எதிா்பாராதவிதமாக மோதியது.
இதில், பேருந்தில் பயணம் செய்த திண்டுக்கல் பா. நாற்றாயன் (45), மதுரை ப. செல்வராஜ் (41), இவரது மகன் ரமேஷ் (30), மருமகள் நளின் (24) உள்ளிட்ட 16 பயணிகள் காயமடைந்தனா். இவா்களை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
விபத்து குறித்து எப்போதும்வென்றான் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.