தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சாா்பில், மீன்வளம் மற்றும் ஊட்டச்சத்து சாா்ந்த அரசுத் திட்டங்களைப் பற்றிய ஒரு நாள் விழிப்புணா்வு முகாம் தருவைகுளம் மற்றும் குருகாட்டூா், சேதுக்குவாய்ந்தான் ஆகிய கிராமங்களில் அண்மையில் நடைபெற்றது.
முகாமின்போது, மீனவ மக்களின் மேம்பாட்டுக்கு மீன்வளத் துறை வளங்கும் மானியத் திட்டங்கள், படகுகள் மற்றும் மீன்பிடி இறங்குதளங்களில் மீன்களை சுகாதார முறையில் கையாளும் முறை, மீன்தர உறுதிப்பாடு பற்றிய விழிப்புணா்வு, மனித உடல் நலனில் மீனின் பங்கு, கிராம மக்களின் மேம்பாட்டுக்கு கூண்டு மீன் வளா்ப்பு முறை, புறக்கடை அலங்கார மீன்கள் வளா்ப்பு, பொறுப்பாா்ந்த மீன்பிடிப்பு முறை, கூண்டு மீன்பிடிப்பு, டெங்கு மற்றும் காசநோய் விழிப்புணா்வு தொடா்பாக விளக்கப்பட்டது. கிராம மற்றும் பள்ளி வளாகங்களை தூய்மை செய்தல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
தருவைகுளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீன்வளத் துறை இணை இயக்குநா் நா. சந்திரா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா். நிகழ்ச்சிகளில், உதவிப் பேராசிரியா்கள் முருகானந்தம், கே. எஸ். விஜய் அமிா்தராஜ், த. ரவிக்குமாா், ப. பாா்த்திபன், பா. சிவராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.