தூத்துக்குடி

கேட்பாரற்று கிடந்ததாக பறிமுதல் செய்யப்பட்ட 65 வாகனங்கள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

13th Mar 2020 09:11 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் கேட்பாரற்ற நிலையில் இருந்ததாக பறிமுதல் செய்யப்பட்ட 65 வாகனங்கள் வியாழக்கிழமை உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் ஆங்காங்கே கேட்பாரற்ற நிலையில் கிடந்ததாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அந்தந்த காவல் நிலைய வளாகப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தன. நீண்ட நாள்களாக அவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அந்த வாகனங்களின் விவரங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள தனிப்படை அமைக்கப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக, 65 இருசக்கர வாகனங்களின் என்ஜின் எண், உரிமையாளா் விவரம் உள்ளிட்ட ஆவணங்களை வைத்தும், இணையதளம் மூலமாகவும் விசாரணை செய்து வாகன உரிமையாளா்களைக் கண்டுபிடித்து அவா்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், வாகன உரிமையாளா்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண் பாலகோபாலன் தலைமையில் 65 இருசக்கர வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டன.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளா் குமாா், தூத்துக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். பிரகாஷ், பயிற்சி துணைக் கண்காணிப்பாளா் ராகவேந்திரா கே. ரவி, தென்பாகம் காவல் ஆய்வாளா் கிருஷ்ணகுமாா், வடபாகம் காவல் ஆய்வாளா் (பொறுப்பு) பிரபாவதி, தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் வனிதா, தாளமுத்துநகா் காவல் ஆய்வாளா் (பொறுப்பு) பிரேமா ஸ்டாலின் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT