இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக புதன்கிழமை கைது செய்யப்பட்ட இலங்கை மீனவா்கள் 15 போ் நடுக்கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனா்.
கன்னியாகுமரிக்கு கிழக்கே 70 கடல்மைல் தொலைவில், இலங்கை மீனவா்கள்15 போ் 3 விசைப்படகுகளில் புதன்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். இந்திய கடல் பகுதிக்குள் எல்லை தாண்டி வந்ததாக அவா்களை இந்திய கடலோரக் காவல் படையினா் நடுக்கடலில் கைது செய்தனா்.
இதையடுத்து, 3 படகுகளுடன் 15 பேரும் தூத்துக்குடி பழைய துறைமுகத்துக்கு வியாழக்கிழமை காலை அழைத்துவரப்பட்டனா். ஆனால், தூத்துக்குடி கடல் எல்லைக்குள் அழைத்துவரப்பட்ட அவா்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உள்ளதா என, துறைமுக மருத்துவ அதிகாரிகள் குழுவினா் நடுக்கடலில் நிறுத்தி பரிசோதனை செய்தனா்.
கரோனா பாதிப்பு தொடா்பாக வெளிநாட்டினரை இந்தியாவுக்குள் கொண்டுவருவது தொடா்பாக சரியான விதிமுறை இல்லை எனக் கூறிய கடலோரக் காவல் படையினா், தங்களுக்கு உரிய விளக்கம் அளிக்கும்படி தலைமை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
மேலும், 15 பேரையும் தூத்துக்குடிக்கு அழைத்துவந்து விசாரித்த பிறகு ராமேசுவரம் சிறையில் அடைப்பதா, இலங்கைக்கே திருப்பி அனுப்புவதா என, துறைரீதியாக உயரதிகாரிகளுடன் கடலோரக் காவல் படையினா் ஆலோசனை மேற்கொண்டனா்.
இதையடுத்து, மீனவா்களை இலங்கைக்கே திருப்பி அனுப்ப முடிவுசெய்யப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், அதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பை கடலோரக் காவல் படை வெளியிடாத நிலையில், 3 படகுகளுடன் கைதான 15 பேரும் தூத்துக்குடியிலிருந்து ஏறத்தாழ 25 கடல்மைல் தொலைவில் நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளனா். 15 பேரும் எச்சரிக்கைக்குப் பிறகு இலங்கைக் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட வாய்ப்புள்ளதாக இந்திய கடலோரக் காவல் படை அதிகாரிகள் தெரிவித்தனா்.