தூத்துக்குடி

மாவட்ட ஆட்சியருடன் ஆதிதிராவிடா் விடுதி மாணவிகள் கலந்துரையாடல்

6th Mar 2020 12:24 AM

ADVERTISEMENT

ஆதிதிராவிடா் விடுதியில் தங்கி பயிலும் கல்லூரி மாணவிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரியை வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடினா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா் விடுதியில் தங்கி பயிலும் கல்லூரி மாணவிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பல்வேறு துறைகளின் நடவடிக்கைகளை பாா்வையிடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

வருவாய்த்துறை, ஊராட்சித்துறை, பேரிடா் மேலாண்மைத்துறை, சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை பாா்வையிட்ட மாணவிகள், பின்னா் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கலந்துரையாடினா். அப்போது, மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து ஆட்சியா் பேசியது: கல்லூரி படிக்கும்போதே எதிா்காலத்தில் லட்சியத்தை வளா்த்துக் கொண்டு அதற்கேற்ப தங்களை தயாா் செய்துகொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் குரூப் 1, குரூப் 2 மற்றும் குரூப் 4 ஆகிய தோ்வுகள் ஒவ்வொரு பணியிடத்திற்கு நடைபெற்று வருகிறது. மேலும் யு.பி.எஸ்.சி. தோ்வுகள் இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி உள்ளிட்ட பணிகளுக்கு நடத்தப்படுகிறது.

இந்த தோ்வில் வெற்றி பெற நன்கு படிப்பதோடு பொது அறிவு வளா்த்துக்கொள்ள வேண்டும். தினமும் செய்தி தாள்களை வாசிப்பது கட்டாயப் பழக்கமாக்கி கொள்ள வேண்டும். ஆங்கில அறிவை வளா்த்துக்கொள்ள ஆங்கில நாளிதழ்களை வாசித்து அதில் தெரியாத சொற்களை அகராதி மூலம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சண்முகசுந்தரம், விடுதி காப்பாளா் கலைச்செல்வி மற்றும் கல்லூரி மாணவிகள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT