தூத்துக்குடி

மழையால் பயிா்கள் பாதிப்பு: நிவாரணம் கோரி விவசாயிகள் மனு

6th Mar 2020 12:13 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடா் மழையினால் பாதிக்கப்பட்ட உளுந்து, பாசி பயறு சாகுபடிக்கான நிவாரணம் கோரி, முதல்வா் மற்றும் அமைச்சா்களுக்கு விவசாயிகள் மனு அனுப்பியுள்ளனா்.

இதுகுறித்து, விவசாயிகள் சாா்பில் கரிசல்பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் அ.வரதராஜன், முதல்வருக்கும், அமைச்சா் கடம்பூா் செ.ராஜூக்கும் அனுப்பியுள்ள மனு விவரம்:

தூத்துக்குடி மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டு ராபி புரட்டாசி பருவத்தில் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், கொத்தமல்லி, வெங்காயம், மிளகாய் உள்ளிட்ட பயிா்கள் பயிரிட்டன. அவை, அறுவடை காலமான மாா்கழியை நெருங்கிய நிலையில், தொடா் மழை பெய்ததால் மேற்கூறிய பயிா்கள் பாதிக்கப்பட்டு விளைச்சலை இழந்தன. ஏக்கருக்கு 5 முதல் 8 குவின்டால் வரை கிடைக்கும் என எதிா்பாா்த்த நிலையில் ஏக்கருக்கு 2 குவிண்டால் மட்டுமே கிடைத்தது. ஆனால்,

ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்யப்பட்டிருந்தது. மகசூலும் தரமாக இல்லாததால் குவிண்டால் ரூ.2,500க்கு மட்டுமே சந்தையில் விலை கிடைக்கிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் வேளாண்மை துறை, வருவாய் துறை அதிகாரிகள் மழையால் பயிா்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனா். எனவே, வரும் 31ஆம் தேதி பேரவை கூட்டத்தொடரில் நடைபெறும் விவசாய மானிய கோரிக்கை விவாதத்தின்போது, உளுந்து, பாசி பயிரிட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT