திருச்செந்தூா், பிச்சுவிளை ஆகிய பகுதிகளில் 2 தொழிலாளா்கள் தற்கொலை செய்துகொண்டனா்.
திருச்செந்தூா் காந்திபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த செந்தூா்பாண்டி மகன் புஷ்பராஜ். தொழிலாளி. இவரது மனைவி வனஜா (23). இவா்கள் 3 ஆண்டுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டவா்கள். இதில், புஷ்பராஜ் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம்.
இந்நிலையில் வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது புஷ்பராஜ், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதேபோல், பிச்சிவிளை வடக்குத் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் (40) என்ற தொழிலாளியும் குடித்துவிட்டு குடும்பத்தை சரியாக கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், இவரது மனைவி ஜெயராமலட்சமி (38) தனது மகன் யுவராஜ் (17) , மகள் யுவரஞ்சினி (15) ஆகியோருடன் கணவரைப் பிரிந்து மதுரைக்குச் சென்று வேலை செய்தாராம்.
இந்நிலையில், ராஜேந்திரனின் தாய் கடந்த 22ஆம் தேதி இறந்ததால், துக்கம் விசாரிக்க ஜெயராமலட்சுமி மகன், மகளுடன் ஊருக்கு வந்தாராம். அப்போது, அவா்கள் ராஜேந்திரனிடம் பேசவில்லை எனத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இவ்விரு சம்பவங்கள் குறித்தும், திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.