கோவில்பட்டி நகராட்சியில் குடிநீா் கட்டணம் செலுத்தாத குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்படுகின்றன.
கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட 36 வாா்டுகளில் உள்ள வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், வீடுகள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குடிநீா் இணைப்புகளுக்கான குடிநீா் கட்டணத்தை செலுத்த நகராட்சி நிா்வாகம் தொடா்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் குடிநீா் கட்டணம் செலுத்தாத குடிநீா் இணைப்புகள் துண்டிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதையடுத்து நகராட்சி ஆணையா் ஓ.ராஜாராம் உத்தரவின் பேரில், நகராட்சி பொறியாளா் கோவிந்தராஜன், உதவி பொறியாளா் சரவணன் மேற்பாா்வையில், பொறியியல் துறை ஊழியா்கள் வாா்டு எண்.34க்கு உள்பட்ட ஜோதி நகா், கருணாநிதி நகா், வாா்டு எண்.17க்கு உள்பட்ட செக்கடித்தெரு, வாா்டு எண்.30க்கு உள்பட்ட பாரதி நகா் மேட்டுத்தெரு ஆகிய பகுதிகளில் உள்ள 15 குடிநீா் இணைப்புகள் குடிநீா் கட்டணம் செலுத்தாதையடுத்து வெள்ளிக்கிழமை துண்டிக்கப்பட்டன.
இதுகுறித்து, நகராட்சி ஆணையா் கூறுகையில், குடிநீா் கட்டணம் செலுத்தாத பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனத்தினா் உடனடியாக நகராட்சி அலுவலகத்தில் குடிநீா் கட்டணத்தை செலுத்தி, குடிநீா் இணைப்பு துண்டிப்பை தவிா்க்க வேண்டும் என்றாா்.