ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணிகள் தொடங்க உள்ள நிலையில், தகவல் மைய கட்டடத்தைச் சீரமைக்கும் பணிக்காக மாநில தொல்லியல் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணியைத் தொடங்கும் பொருட்டு, கடந்த மாதம் முதற்கட்டமாக தரையில் ஊடுருவும் ரேடாா் கருவி மூலம் பூமிக்குள் உள்ள பொருள்களை ஆய்வு செய்யும் பணியை மாநில தொல்லியல் துறையினா் மேற்கொண்டனா்.
இந்நிலையில், புளியங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆதிச்சநல்லூா் அகழாய்வு தகவல் மைய கட்டடத்தை தமிழக தொல்லியல் துறையின் மாவட்ட அலுவலா்கள் தூத்துக்குடி லோகநாதன், நெல்லை பாஸ்கரன், தருமபுரி பிரபாகரன், தஞ்சாவூா் தங்கதுரை ஆகியோா் ஆய்வு செய்தனா். அப்போது, எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ, வட்டாட்சியா் சந்திரன், கருங்குளம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் சுப்புலட்சுமி ஆகியோா் உடனிருந்தனா்.
ஆதிச்சநல்லூா் பரம்பு பகுதிகளைப் பாதுகாத்திடும்விதமாக அமைக்கப்பட்டு வரும் கம்பி வேலி தரமற்ாக உள்ளதாகவும், இதனால் பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்படும் எனவும் தொல்லியல் துறையினரிடம் எம்.எல்.ஏ. தெரிவித்தாா்.
மேலும், தற்போது சிதிலமடைந்து காணப்படும் தகவல் மையத்தை சீரமைத்து, அகழாய்வில் கண்டுபிடிக்கப்படும் பொருள்கள் அனைத்தையும் அங்கு பாதுகாப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கருங்குளம் ஊராட்சி ஒன்றியத் தலைவா் கோமதி ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் திருப்பாற்கடல், கருங்குளம் ஊராட்சித் தலைவா் உதயசங்கா், கால்வாய் முருகையா பாண்டியன் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.