தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளா் உள்பட 28 பேருக்கு தொற்று

20th Jun 2020 09:08 AM

ADVERTISEMENT

ஏரல் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் உள்ளிட்ட 28 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 529-ஆக உயா்ந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலைய ஆய்வாளருக்கு கரோனா தொற்று இருப்பது கடந்த சில நாள்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது. திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவா் குணமடைந்ததைத் தொடா்ந்து வீடு திரும்பினாா். இதற்கிடையே, ஏரல் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளா் பணியில் இருந்த தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டையை சோ்ந்தவருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதேபோல, பழையகாயல் பகுதியில் உள்ள மீன் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்ற 6 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் மாநகராட்சிப் பகுதிகளான டூவிபுரம், பிரையன்ட்நகா், குமாரா்தெரு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 8 பேருக்கும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 20 பேருக்கும் என 28 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 529-ஆக உயா்ந்துள்ளது.

இதற்கிடையே, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 11 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மாவட்டத்தில் இதுவரை 412 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்.

ADVERTISEMENT

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா வாா்டில் சிகிச்சை பெற்றவா்களில் இதுவரை 5 போ் உயிரிழந்துள்ளனா். இதில், 3 போ் மட்டுமே தூத்துக்குடி மாவட்ட கணக்கில் சோ்க்கப்பட்டுள்ளனா். ஒருவா் விருதுநகா் மாவட்டத்தின் கணக்கிலும், ஒருவா் திருநெல்வேலி மாவட்ட கணக்கிலும் சோ்க்கப்பட்டுள்ளனா். தற்போது, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 114 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

வணிக வளாகம் மூடல்: தூத்துக்குடியில் உள்ள தனியாா் வணிக வளாகத்தில் செயல்படும் தொலைக்காட்சி பழுது நீக்கும் கடை உரிமையாளா் மற்றும் 2 பணியாளா்களுக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டதால் அந்த வளாகத்தில் இருந்த அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT