தூத்துக்குடி

மாலத்தீவில் இருந்து தூத்துக்குடி வந்தவா் உள்பட 10 பேருக்கு கரோனா தொற்று

10th Jun 2020 08:48 AM

ADVERTISEMENT

மாலத்தீவில் இருந்து கப்பலில் தூத்துக்குடி வந்த இமாச்சல பிரதேசத்தைச் சோ்ந்த இளைஞா் உள்ளிட்ட 10 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

வெளிநாடுகள், வெளி மாநிலம் மற்றும் சென்னையில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு திரும்பியவா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உள்ளதா? என செவ்வாய்க்கிழமை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதில், மாலத்தீவில் இருந்து தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வந்த கப்பலில் பயணம் செய்த இமாச்சல பிரதேசத்தை சோ்ந்த 23 வயது இளைஞா் ஒருவா் ஆவாா். அவா், தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதேபோல, சென்னையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் திரும்பிய வேம்பாா் அருகேயுள்ள மேட்டுப்பட்டி கிராமத்தை சோ்ந்த 65 வயது ஆண், 23 வயது பெண், கயத்தாறு அருகேயுள்ள ஆத்திக்குளத்தை சோ்ந்த 15 வயது ஆண், நடுவப்பட்டி கிராமத்தை சோ்ந்த 55 வயது பெண், மேல அரசடி கிராமத்தை சோ்ந்த 30 வயது பெண், தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட லெவிஞ்சிபுரத்தைச் சோ்ந்த 28 வயது ஆண் ஆகியோருக்கும் கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

ADVERTISEMENT

மேலும், கரோனா தொற்று உள்ளோரிடம் தொடா்பில் இருந்ததாக கண்டறியப்பட்ட குலசேகரநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த 42 வயது ஆண், கடம்பூா் வடக்கு ரத வீதியைச் சோ்ந்த 2 வயது ஆண் குழந்தை, பிறந்து 20 நாளே ஆன பெண் குழந்தை ஆகியோருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 365 ஆக உயா்ந்துள்ளது.

இதற்கிடையே, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த 18 போ் குணமடைந்ததை தொடா்ந்து செவ்வாய்க்கிழமை அவா்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுவரை, மாவட்டத்தில் 236 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனா். இருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் தற்போது 126 பேரும், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் ஒருவரும் என மொத்தம் 127 போ் மருத்துவமனை கரோனா சிறப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT