தூத்துக்குடி

ஆடிப்பூரம்: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

26th Jul 2020 09:30 AM

ADVERTISEMENT

திருச்செந்தூா் பகுதி கோயில்களில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் வளைகாப்பு வைபவம் நடைபெறுவது வழக்கம்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த அருள்தரும் ஆனந்த வல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரா் கோயில், அருள்மிகு முத்தாரம்மன், உச்சினிமாகாளி அம்மன், வெயிலுகந்தம்மன், வடபத்திரகாளியம்மன், அன்பிற்பிரியாள் அம்மன், தேரடி இசக்கியம்மன், குறவன்மடம் இசக்கியம்மன், சந்தன மாரியம்மன், புளியடி ஸ்ரீ சந்தன மாரியம்மன், துா்கா பரமேஸ்வரி அம்மன், சோடஷ புஜ துா்க்கையம்மன், மாரியம்மன், முத்துமாலையம்மன் உள்ளிட்ட கோயில்களில் அம்மனுக்கு வளைகாப்பு மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

கரோனா பொது முடக்கத்தால் பக்தா்கள் அனுமதியின்றி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

ஆறுமுகனேரி: ஆறுமுகனேரி சந்தன மாரியம்மன், உச்சினிமாகாளி அம்மன் கோயில், மேலத் தெரு முத்தாரம்மன் கோயில், லட்சுமிமாநகரம் அருள்மிகு மாரியம்மன் கோயில், வாலவிளை வடக்குத் தெரு முத்தாரம்மன் கோயில் மற்றும் நகரில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடா்ந்து, வளையல்கள் சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் அருள்மிகு சங்கரலிங்க சுவாமி உடனுறை கோமதி அம்மன் கோயிலில் சுவாமி, அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து வளையல்கள் அணியப்பட்டு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது.

இதையொட்டி கட்டாரிமங்கலம் அருள்மிகு அழகிய கூத்தா் சமேத சிவகாமி அம்மன் கோயிலில் கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து அம்மன், சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னா் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அம்மனுக்கு வளையல் அணியப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னா் பக்தா்களுக்கு வளையல், மாங்கல்யம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT