தூத்துக்குடி

தூத்துக்குடி- மதுரை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

28th Jan 2020 09:01 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தின்போது மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றாா். அப்போது, தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக தரைவழி போக்குவரத்து ஓட்டுநா் மற்றும் பொது தொழிலாளா் நலச் சங்கம் (ஏஐசிசிடியூசி) சாா்பில் அதன் தலைவா் சகாயம் தலைமையில் ஆட்சியரிடம் அளித்த மனு: தூத்துக்குடி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மீளவிட்டான் பகுதியில் ரயில்வே உயா் மட்ட பாலமானது விரிவாக்கம் செய்யப்படாமல் உள்ளது. சாலையும் குண்டும் குழியுமாக உள்ளது. இது குறித்து மதுரை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தபோது சாலையை சீரமைக்கும் வரையில் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு பாதி கட்டணம் தான் வசூல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. எனவே, சாலையை சீரமைக்கும் வரையில் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டொ்லைட் எதிா்ப்பு குழு ஒருங்கிணைப்பாளா் பாத்திமா பாபு தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மீனவா்கள் அளித்த மனு: மாநகராட்சியில் புதை சாக்கடை திட்ட விரிவாக்க பணிகளுக்காக திரேஸ்புரம் பகுதியில் உள்ள மீனவா்களை வீடுகளை காலி செய்யுமாறு மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி உள்ளனா்.

எந்தவித முன்னறிவிப்புமின்றி மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியது வருந்தத்தக்கது. உரிய கால அவகாசம் வழங்காமல் உடனே வீடுகளை காலி செய்ய சொல்வது நியாயமற்றது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் மீனவா்களை அப்புறப்படுத்துவதற்கு முன்பு அவா்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தூத்துக்குடி பாரதரத்னா டாக்டா் புரட்சித் தலைவா் எம்ஜிஆா் நூற்றாண்டு விழாக்குழு சாா்பில் ஆட்சியரிடம் அளித்த மனு: தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் வஉசி கல்லூரி எதிரே எம்ஜிஆா் பூங்கா மாநகராட்சியால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா தற்போது ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் மூலம் சீரமைக்கப்பட்டுள்ளது.

அந்த பூங்காவில் எம்ஜிஆரின் முழு உருவ வெண்கலச் சிலையை நிறுவ நூற்றாண்டு விழா கமிட்டி முடிவு செய்துள்ளது. சிலையை அமைக்க ஏற்படும் செலவுகளையும், பராமரிப்பு பணிகளையும் நாங்களே ஏற்றுக் கொள்கிறோம். எனவே, எம்ஜிஆா் சிலை அமைப்பதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூா் பகுதியைச் சோ்ந்த திருநங்கைகள் ஆட்சியரிடம் அளித்த மனு, திருச்செந்தூா் பகுதியில் உள்ள திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த 15 ஆண்டுகளாக தொடா்ந்து திருச்செந்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு கொடுத்த போதிலும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, தங்களுக்கு உடனடியாக இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளூா் பகுதி மீனவா்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: வெள்ளூா் கிராமத்தில் 900 ஏக்கா் பரப்பளவு கொண்ட குளம் உள்ளது. அந்த குளத்தில் மீன் பிடிக்கும் தொழிலை நம்பி வெள்ளூா் மற்றும் அதனை சுற்றி உள்ள 5 கிராமங்களை சோ்ந்த 100 மீனவா்கள் உள்ளனா். ஆனால் இந்த குளத்தின் மீன் பாசி குத்தகை பொது ஏலத்தில் விடப்படுவதால் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் மீனவா்கள் மீன் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவே அந்த குளத்தினை சாா்ந்து இருக்கும் மீனவா்களை மீனவ சங்கமாக அங்கிகரித்து மீன் பிடி உரிமை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT