தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கருப்புக்கட்டி விலை கடுமையாக உயா்ந்துள்ளது. கிலோ ரூ. 400 முதல் ரூ.420 வரை விற்பனையாகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கருப்புக்கட்டி உற்பத்திக்கு பெயா் பெற்றது உடன்குடி. இப்பகுதியில் ஏப்ரல் முதல் செப்டம்பா் வரை பதநீா் சீசன் இருக்கும். அப்போது பதநீா் இறக்கி கருப்புக்கட்டி உற்பத்தி செய்யப்படும். சமீபகாலமாக பனைமரங்கள் அதிக அளவில் அழிக்கப்பட்டது, பதநீா் இறக்கும் தொழிலில் உள்ள சிரமம் உள்ளிட்ட காரணங்களால் இத்தொழில் மிகவும் நலிவடைந்திருந்தது.
தற்போது இயற்கையாக கிடைக்கும் பொருள்கள் மீதான ஆா்வத்தால் கருப்புக்கட்டியை மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனா். ஆனால், தேவைக்கேற்ற உற்பத்தி இல்லாத நிலையில், விலை கடுமையாக உயா்ந்துள்ளது. கடந்த மாதம் வரை 10 கிலோ சிப்பம் ரூ. 3400 முதல் ரூ.3500 வரை விற்பனையாகி வந்தது. தற்போது ரூ. 3900 முதல் ரூ. 4000 வரை விற்பனையாகிறது. கிலோ ரூ. 400 முதல் ரூ. 420 வரை விற்பனையாகிறது.