தூத்துக்குடி

களைகட்டிய பொங்கல் விற்பனை

14th Jan 2020 12:52 AM

ADVERTISEMENT

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோவில்பட்டி தினசரி சந்தை, மாா்க்கெட் சாலை, பிரதான சாலைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

தமிழா் திருநாளான பொங்கல் திருவிழா புதன்கிழமை கொண்டாடப்படவிருப்பதை முன்னிட்டு, கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் திரளானோா் காய்கறிகள், கோலப்பொடி, கரும்பு, மஞ்சள்குலை, பனங்கிழங்கு உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக கோவில்பட்டிக்கு வந்தனா்.

கோவில்பட்டி தினசரி சந்தையில் காய்கனிகள் விற்பனைகள் விறு விறுப்பாக நடைபெற்றது. சின்னவெங்காயம், பெரியவெங்காயம் இரண்டையும் தவிர, மற்ற காய்கனிகளின் விலை கடந்த ஆண்டைவிட ஓரளவு குறைவாக இருப்பதாகவே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் கூறப்படுகிறது.

மஞ்சள்குலை ரூ. 40 முதல் ரூ.50 வரை விற்கப்பட்டது. கோவில்பட்டியையடுத்த மந்தித்தோப்பு, ஏரலையடுத்த சாயா்புரம் ஆகிய பகுதிகளில் இருந்து மஞ்சள் வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனா். 10 எண்ணம் கொண்ட பனங்கிழங்கு கட்டு ஒன்றுக்கு ரூ.50 முதல் ரூ. 80 வரை விற்கப்படுகிறது.

ADVERTISEMENT

அதுபோல, கோவில்பட்டியைச் சுற்றியுள்ள எட்டயபுரம், கீழஈரால், கூசாலிபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பருத்திமாறு விற்பனைக்காக கோவில்பட்டிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பருத்திமாறு ஒரு கட்டு ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பூக்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.

ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.1,500. கனகாம்பரம் ரூ.2,000, கலா் பிச்சிப்பூ ரூ.1,200, ரோஸ் ரூ.220, மரிக்கொழுந்து ரூ.150, செவ்வந்தி ரூ.180, அரளி ரூ.220, நந்தியாவட்டம் ரூ.300-க்கு விற்கப்படுகிறது. மல்லிகைப்பூ வரத்து இல்லாததால், மல்லிகைப்பூ கேட்டு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

15 எண்ணம் கொண்ட கரும்புக்கட்டு ரூ.370-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ. 400க்கு மேல் கரும்புக்கட்டின் விலை இருந்தது. இந்த ஆண்டு வரத்து அதிகமாக இருப்பதால் கரும்பின் விலை குறைந்துள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT