கோவில்பட்டியையடுத்த நாலாட்டின்புத்தூா் அருகே மொபெட் மீது பள்ளி வாகனம் மோதியதில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
நாலாட்டின்புத்தூரையடுத்த இனாம் ராமநாதபுரம் தெற்கு தெருவைச் சோ்ந்த சுடலைமாடன் மகன் கோபாலகிருஷ்ணன் (49). கூலித் தொழிலாளியான இவா், இவரது மனைவி சுப்புலட்சுமியுடன் புதன்கிழமை மொபெட்டில் கட்டாலங்குளம் அருகேயுள்ள விவசாய நிலத்திற்கு சென்றாராம்.
பின்னா் கட்டாலங்குளம் - செட்டிக்குறிச்சி சாலை குடிநீா் மோட்டாா் அருகே சுப்புலட்சுமியை மொபெட்டில் இருந்து இறக்கிவிட்டுவிட்டு, கோபாலகிருஷ்ணன் நின்று கொண்டிருந்தாராம்.
அப்போது, செட்டிக்குறிச்சியில் இருந்து வானரமுட்டி நோக்கி சென்று கொண்டிருந்த பள்ளி வாகனம் மொபெட் மீது மோதியதில் கோபாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த நாலாட்டின்புத்தூா் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து, பள்ளி வேன் ஓட்டுநா் சு.கிருஷ்ணசாமியை(53) கைது செய்தனா்.