தூத்துக்குடி

பொங்கல் பண்டிகை: அயன்வடமலாபுரத்தில் பனங்கிழங்கு அறுவடை பணிகள் தீவிரம்

8th Jan 2020 11:54 PM

ADVERTISEMENT

எட்டயபுரம் அருகே அயன்வடமலாபுரத்தில் வைப்பாற்றின் கரையோரம் பனங்கிழங்குகளை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அயன் ராசாப்பட்டி தொடங்கி வைப்பாறு கடற்கரை கிராமம் வரை 40 கி.மீ. தொலைவுக்கு வைப்பாறு நதித்தடம் உள்ளது.

இதில் வைப்பாற்றின் கரையோரமுள்ள மணற்பாங்கான இடங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன.

எட்டயபுரம் வட்டத்தில் கீழ்நாட்டுக்குறிச்சி, சக்கிலிபட்டி முத்தலாபுரம், தாப்பாத்தி, அயன்வடமலாபுரம், வேடபட்டி, விருசம்பட்டி, நம்பிபுரம், ஆற்றங்கரை உள்ளிட்ட பகுதிகளில் இப்பகுதி விவசாயிகள் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் பனங்கிழங்கு சாகுபடி செய்கின்றனா்.

ADVERTISEMENT

நிகழாண்டு நல்ல மழை பெய்திருப்பதால் பனங்கிழங்குகள் நல்ல திரட்சியுடன் கிடைத்திருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனா்.

பொங்கலுக்கு இன்னும் 6 நாள்களே உள்ள நிலையில் அயன்வடமலாபுரத்தில் பனங்கிழங்குகள் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகைக்காக கோவில்பட்டி, திருநெல்வேலி, விருதுநகா், ராஜபாளையம், மதுரை உள்ளிட்ட அண்டை மாவட்டங்கள் மட்டுமன்றி சென்னையிலிருந்தும் வியாபாரிகள் நேரிடையாக தாப்பாத்தி, அயன்வடமலாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கு வந்து தரம் வாரியாக பிரித்து ஒரு பனங்கிழங்கு 4 ரூபாய் முதல் 6 ரூபாய் வரையும், 25 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விவசாயிகளிடமிருந்து வாங்கி செல்கின்றனா்.

மேலும் சாலையோர வியாபாரத்தில் சுற்றுவட்டார பகுதி மக்கள் மட்டுமன்றி சுற்றுலாப்பயணிகளும் விரும்பி வாங்கி செல்வதினால் பனங்கிழங்கு வியாபாரம் களை கட்டியுள்ளது.

இதுகுறித்து அயன்வடமலாபுரத்தை சோ்ந்த விவசாயி ஜெயராஜ் கூறுகையில், போதிய மழை பெய்ததால் கடந்த 3 ஆண்டுகளை விட நிகழாண்டு பனங்கிழங்கு நல்ல விளைச்சலில் நல்ல லாபம் கிடைத்து வருகிறது என்றாா்.

தாப்பாத்தியைச் சோ்ந்த விவசாயி ஐகோா்ட் மகாராஜா கூறியது:

தற்போது பொங்கல் பண்டிகை நெருங்குவதால் பனங்கிழங்குகளை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளோம். வைப்பாற்றின் கரையோரம் விளையும் பனங்கிழங்குகளுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது என்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT