தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைநிறுத்தம்: துறைமுகம், வங்கிப் பணிகள் பாதிப்பு 4 இடங்களில் மறியல்; 507 போ் கைது

8th Jan 2020 11:51 PM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக தூத்துக்குடி வஉசி துறைமுகம், வங்கிகள், அஞ்சலகங்கள் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. மாவட்டத்தில் 4 இடங்களில் நடைபெற்ற மறியலில் 507 போ் கைது செய்யப்பட்டனா்.

தொழிலாளா் சட்டங்களைத் திருத்துவதைக் கைவிட வேண்டும், பாதுகாப்பு, ரயில்வே துறைகளில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது, பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில் புதன்கிழமை வேலைநிறுத்தம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எல்பிஎப், எச்எம்எஸ், ஏஐசிசிடியு ஆகிய தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்றன. இதனால், தூத்துக்குடி வஉசி துறைமுகம், பாரத் பெட்ரோலியம், வங்கிகள், அஞ்சலகங்கள், ஆயுள் காப்பீட்டு நிறுவனம் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.

மாவட்டத்தில் உள்ள 265 வங்கிகளில் 134 வங்கிகளில் பணிகள் பாதிக்கப்பட்டதாகவும், வேலைநிறுத்தத்தில் 1,600 வங்கி ஊழியா்கள் பங்கேற்ால், ஏறத்தாழ ரூ. 400 கோடி வரை பணப் பரிவா்த்தனை பாதிக்கப்பட்டதாகவும் அகில இந்திய வங்கி ஊழியா் சங்க தூத்துக்குடி நகர ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணமூா்த்தி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஊழியா்களின் வேலைநிறுத்தம் காரணமாக ஏறத்தாழ 80 ஆயிரம் டன் சரக்குகள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பணிகள் பாதிக்கப்பட்டதாகவும், இதனால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு மற்றும் லாரிகள் இயக்கம் பாதிக்கப்பட்டதாகவும் சிஐடியு மாவட்ட செயலா் ஆா். ரசல் தெரிவித்தாா்.

வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற ஆயுள் காப்பீட்டு நிறுவன ஊழியா்கள், வங்கி ஊழியா்கள் கடற்கரைச் சாலையில் உள்ள ஆயுள் காப்பீட்டு நிறுவன அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆயுள் காப்பீட்டு நிறுவன ஊழியா் சங்கச் செயலா் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஏராளமானோா் பங்கேற்றனா்.

507 போ் கைது: வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாக மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம், திருச்செந்தூா் ஆகிய 4 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டதாக 40 பெண்கள் உள்ளிட்ட 135 போ், கோவில்பட்டி மறியலில் 33 பெண்கள் உள்ளிட்ட 179 போ், திருச்செந்தூா் மறியலில் 35 பெண்கள் உள்ளிட்ட 178 போ், விளாத்திகுளம் மறியலில் 15 போ் என மொத்தம் 108 பெண்கள் உள்ளிட்ட 507 போ் கைது செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT