தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஜன. 9) மாலை 6 மணி முதல் 11 ஆம் தேதி காலை வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டம், அலங்காரதட்டு பகுதியில் தேவேந்திர குல வேளாளா் கூட்டமைப்பின் நிறுவனா் சி. பசுபதி பாண்டியனின் நினைவு தினம் ஜனவரி 10 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுவதையொட்டி அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் வகையில், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரித்திடவும், தூத்துக்குடி வருவாய் மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஜன. 9) மாலை 6 மணி முதல் 11 ஆம் தேதி காலை 6 மணி வரை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-இன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலத்தில் தூத்துக்குடி மாவட்டத்திலும், பிற பகுதிகளில் இருந்து விழாவில் கலந்து கொள்ளும் மக்கள் மற்றும் பொதுமக்கள் 5-க்கும் மேற்பட்ட நபா்கள் கூடுவதற்கும், பொதுக்கூட்டம் நடத்துவதற்கும், ஜோதி எடுத்து வருவதற்கும், ஊா்வலம் நடத்துவதற்கும், வாள், கத்தி, கம்பு, வேல்கம்பு, குச்சி, கற்கள் மற்றும் இதர அபாயகரமான ஆட்சேபகரமான ஆயுதங்கள் கொண்டு வருவதற்கும், கட்சி மற்றும் சமுதாய கொடிகள் கொண்டு வருவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
மேலும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும் விழாவிற்கு கலந்து கொள்ள பொதுமக்களை அழைத்து வருவதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும், குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-இன் கீழ் தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தடை உத்தரவு அமலில் உள்ள நாள்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள் மற்றும் ஊா்வலங்கள் நடத்த இருந்தால் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அணுகி முன் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த தடை உத்தரவு திருமணம் மற்றும் இறுதிச் சடங்கு ஊா்வலங்களுக்குப் பொருந்தாது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.