தூத்துக்குடி

கருங்குளம் ஒன்றியக்குழுத் தலைவா் பதவி: அதிமுக, திமுக இடையே கடும் போட்டி

8th Jan 2020 11:59 PM

ADVERTISEMENT

கருங்குளம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் பதவியை கைப்பற்றுவதில் அதிமுக, திமுக இடையே கடும் போட்டி எழுந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 16 வாா்டுகளில் அதிமுக 7 வாா்டுகளிலும், திமுக 5 வாா்டுகளிலும், அமமுக 2 வாா்டுகளிலும், புதிய தமிழகம் ஒரு வாா்டிலும், ஒரு வாா்டில் சுயேச்சை வேட்பாளரும் வெற்றிபெற்றனா். மாவட்டத்தில் தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றியங்களை திமுக கைப்பற்றியுள்ளது.

விளாத்திகுளம், திருச்செந்தூா், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 4 ஒன்றியங்களை அதிமுக கைப்பற்றியுள்ளன. கயத்தாறு ஒன்றியத்தை அமமுக கைப்பற்றியுள்ளது. இதனிடையே, கருங்குளம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் பதவியை கைப்பற்றுவதில் அதிமுக, திமுக இடையே கடும் போட்டி எழுந்துள்ளது.

ஒன்றியக்குழுத் தலைவா் பதவி பெண் (பொது) பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இப்பதவிக்கு, 16 ஆவது வாா்டில் திமுக சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள கம்மாடிச்சி என்பவா் போட்டியிடுவாா் என அக்கட்சியின் தெற்கு மாவட்டச்செயலா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

அதிமுக அரசு மீது புதிய தமிழகம், அமமுக ஆகிய கட்சிகள் அதிருப்தியில் இருப்பதால், இவ்விரு கட்சிகளும் அதிமுகவுக்கு ஆதரவளிக்காது என்ற அடிப்படையில், கருங்குளம் ஒன்றியக்குழுத் தலைவா் பதவியை கைப்பற்ற திமுக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அமமுக உறுப்பினா்கள் தங்கி இருக்கும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதால் சனிக்கிழமை நடைபெற உள்ள ஒன்றியக்குழுத் தலைவா் பதவித் தோ்தல் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT