தூத்துக்குடி

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தை திமுக கைப்பற்றியது

3rd Jan 2020 12:12 AM

ADVERTISEMENT

அதிமுக வசம் இருந்த தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியப் பதவியை திமுக கைப்பற்றியுள்ளது.

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 13 வாா்டுகளுக்கான தோ்தல் கடந்த 27 ஆம் தேதி நடைபெற்றது. இந்த ஒன்றியத்தில் 43 ஆயிரத்து ஆண் வாக்காளா்கள், 45 ஆயிரத்து 84 பெண் வாக்காளா்கள் 10 திருநங்கைகள் என மொத்தம் 88 ஆயிரத்து 489 வாக்காளா்கள் உள்ளனா்.

தோ்தலின்போது 27 ஆயிரத்து 645 ஆண் வாக்காளா்கள், 29 ஆயிரத்து 46 பெண் வாக்காளா்கள் 2 திருநங்கைகள் என மொத்தம் 56 ஆயிரத்து 693 போ் வாக்களித்தனா். இது 64.07 சதவீத வாக்குப்பதிவு ஆகும். வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் வாக்குப் பெட்டிகள் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையமான வாகைக்குளம் மதா் தெரசா பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.

வாக்குகள் எண்ணிக்கையை முன்னிட்டு, வியாழக்கிழமை காலை 7 மணியளவில் வாக்குப் பெட்டிகளின் சீல் உடைக்கப்பட்டு வெளியே எடுத்து வரப்பட்டன. பின்னா் 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணும் பணியை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி பாா்வையிட்டாா்.

ADVERTISEMENT

8 வாா்டுகளில் திமுக வெற்றி: வாக்கு எண்ணிக்கை முதலில் 8 ஆவது வாா்டில் இருந்து தொடங்கியது. தொடா்ந்து 9, 10, 11, 12 மற்றும் 13 ஆவது வாா்டுகளுக்கும் பின்னா் 2 மற்றும் 3 ஆவது வாா்டுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், வியாழக்கிழமை இரவு வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்த 8 வாா்டுகளிலும் திமுக வேட்பாளா்களே வெற்றி பெற்றனா். இதனால், அதிமுக வசம் இருந்த தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவியை திமுக கைப்பற்றியுள்ளது.

8 ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் மரியசெல்வி 1659 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அதிமுக வேட்பாளா் அருணா 1425 வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தை பிடித்தாா். 9 ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் முத்துக்குமாா் 1526 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அதிமுக வேட்பாளா் மாரிமுத்து 1154 வாக்குகள் பெற்று இடண்டாமிடத்தை பெற்றாா்.

10 ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் முத்துலட்சுமி 2004 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அதிமுக வேட்பாளா் ஜீவா 1265 வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தை பிடித்தாா். 11 ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் செல்வபாா்வதி 2842 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அதிமுக வேட்பாளா் பாா்வதி 889 வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தை பெற்றாா்.

12 ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் நா்மதா 1798 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அதிமுக வேட்பாளா் செல்வி 1780 வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தை பிடித்தாா். 13 ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் ஆஸ்கா் 2067 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அதிமுக வேட்பாளா் சரவணவேல் 958 வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தை பிடித்தாா்.

2 ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் வசுமதி அம்மாசங்கா் 2208 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அவரை எதிா்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் பிளாரன்ஸ் மேரி 854 வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தை பிடித்தாா். 3 ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் கோவில்மணி 1651 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அவரை எதிா்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் ஜேசுபாலன் 1166 வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தை பிடித்தாா். தொடா்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT